ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் கர்நாடக உயர் நீதிமன்றம்? சட்ட சிக்கல்கள் உள்ளதாக துணை முதல்வர் தகவல்
பெங்களூரு: ''கர்நாடக உயர் நீதிமன்றத்தை, ரேஸ் கோர்ஸ் மைதானத்திற்கு இடமாற்றம் செய்வதில் சில சட்ட சிக்கல்கள் உள்ளன,'' என துணை முதல்வர் சிவகுமார் தெரிவித்தார். பெங்களூரு கப்பன் பூங்காவில் 'பெங்களூரு நடைபயணம்' திட்டத்தின் ஒரு பகுதியாக, பொது மக்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நேற்று நடந்தது. அப்போது துணை முதல்வர் சிவகுமார் அளித்த பேட்டி: கப்பன் பூங்கா வளாகத்தில் எந்தவிதமான கட்டுமான பணிகளையும் செய்ய அரசு அனுமதிக்காது. இவற்றை பாதுகாக்க, தேவையான அனைத்து பணிகளையும் செய்வோம். பூங்காவில் சில கலாசார நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்வது குறித்து அரசு பரிசீலிக்கும். எனக்கு தெரிந்தவரை, கப்பன் பூங்கா, சிறப்பாக பராமரிக்கப்படுகிறது. மாணவராக இருந்தபோதும், நான் திருமணமான புதிதில் என் மனைவியை அழைத்து கொண்டு இங்கு வந்துள்ளேன். மர பூங்கா வனத்துறையுடன் ஆலோசித்த பின், அத்துறைக்கு சொந்தமான இடத்தில் கப்பன் பூங்கா, லால்பாக் பூங்கா போன்று 'மர பூங்கா' அமைக்க முடிவு செய்யப்படும். இங்கு எந்த மரங்களும் வெட்டப்படாது. இது வனத்தை பாதுகாக்கவும் உதவும். லால்பாக்கின் மேம்பாட்டுக்கு ஏற்கனவே 10 கோடி ரூபாய் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதுபோன்று, கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியும், வக்கீல்களும் நீதிமன்றத்தை இடமாற்றம் செய்ய, 15 முதல் 20 ஏக்கர் நிலம் வழங்க கோரிக்கை விடுத்து உள்ளனர். இது குறித்து அரசு விவாதிக்கும். சட்ட சிக்கல்கள் அதுபோன்று நகரின் வெளியே உயர் நீதிமன்றத்தை கட்ட முடியாது. நீதிமன்றம் கட்டுவதற்கான இடத்தை அடையாளம் காணும் பணிகள் நடந்து வருகின்றன. சில வக்கீல்கள், ரேஸ் கோர்ஸ் மைதானத்தை பயன்படுத்த பரிந்துரைத்து உள்ளனர். இதில் சில சட்ட சிக்கல்கள் இருப்பதால், பின்னர் யோசிக்கலாம் என்று கூறி உள்ளேன். ஆரம்பத்தில் பெங்களூரின் மையப் பகுதியில் தான் அனைத்து போராட்டங்களும் நடந்து வந்தன. எஸ்.எம்.கிருஷ்ணா முதல்வராக இருந்தபோது, சுதந்திர பூங்காவுக்கு மாற்றப்பட்டது. நகரின் நுரையீரலாக இருக்கும் பூங்காவை காப்பாற்ற, என்னால் செய்ய வேண்டியதை செய்வேன். பூங்காவுக்குள் யார் வந்தனர், வெளியேறினர் என்பதை கண்டறிய, நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும். நகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இருந்தபடி கண்காணிக்குமாறு அறிவுறுத்தி உள்ளேன். தெரு நாய்களின் பிரச்னைகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்படும். ஆயுர்வேத தோட்டம் அமைக்க கோரி உள்ளனர். தெரு விளக்குகள், நடைமேம்பாலம், மைசூரு வங்கி சதுக்கத்தில் தெருவிளக்குகள் இல்லாதது உட்பட பல பிரச்னைகள், கோரிக்கைகள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் தீர்க்கப்படும். சிக்பேட்டை உட்பட முக்கிய நகர சாலைகள் கான்கிரீட் சாலைகளாக மாற்றுவது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசிக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.