வீரேந்திர பப்பியை விடுக்க கோரி மனைவி வழக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் தள்ளுபடி
பெங்களூரு: சித்ரதுர்கா எம்.எல்.ஏ., வீரேந்திர பப்பியை விடுவிக்க கோரி, அவரது மனைவி தாக்கல் செய்த மனுவை, கர்நாடக உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. சித்ரதுர்கா காங்கிரஸ் எம்.எல்.ஏ., வீரேந்திர பப்பி. இவர், கோவாவில் கேளிக்கை விடுதிகளை நடத்தி வருகிறார். அவற்றில் 'பெட்டிங்' நடத்தி சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக இவர் மீது குற்றச்சாட்டு கூறப்பட்டது. இதுகுறித்து அமலாக்கத்துறை அதிரடியாக சோதனை நடத்தி, அவரை கைது செய்தது. இந்த கைதை எதிர்த்து, அவரது மனைவி சைத்ரா, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். மனுவில், 'என் கணவர் சட்ட விரோதமாக கைது செய்யப்பட்டுள்ளார். இது அரசியலமைப்பின் பிரிவு 19, 21ன் கீழ் அடிப்படை உரிமைகள் மீறலாகும். எனவே, அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும்' என்று குறிப்பிட்டிருந்தார். இம்மனு நீதிபதி அருண் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அமலாக்கத் துறை சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் அரவிந்த் காமத் வாதிட்டதாவது: ஹாரோஹள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்த சுனில், 'பெட்டிங்' மோசடி தொடர்பாக விரிவாக குறிப்பிட்டுள்ளார். இது, 30 ஆயிரம் ரூபாய் மோசடி என்றாலும், விசாரணை அதிகாரி, அந்த மோசடி குறித்து மட்டும் விசாரிக்காமல், அது தொடர்பான அனைத்து வழிகளிலும் விசாரிக்கிறார். இதில், 'போன் பே' மூலம் பணப்பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே, ஹாரோஹள்ளி போலீசார் பதிவு செய்த மோசடி வழக்கில், 'குற்றமற்றவர்' என்று உள்ளூர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். இதை நீதிமன்றம் ஏற்கவில்லை. எனவே, இவ்வழக்கை அமலாக்க துறையினர் விசாரிக்கலாம். சட்டவிரோத வருவாய் பெறுவதே அடிப்படை குற்றத்துக்கு போதுமானது. மாநிலத்தில் சட்டவிரோதமாக 'பெட்டிங்' மூலம் சேர்த்த பணத்தை இலங்கை, துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளில் உள்ள கேளிக்கை விடுதிகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. வீரேந்திர பப்பி மீதான அனைத்து குற்றச்சாட்டுகளும் ஒருங்கிணைக்கப்பட்டு விசாரிக்கப்படும். எனவே விண்ணப்பத்தை தள்ளுபடி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் வாதிட்டார். மனுதாரர் சைத்ரா தரப்பு வக்கீல் சந்திரமவுலி வாதிட்டதாவது: கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக 2011ல் வீரேந்திர பப்பி கைது செய்யப்பட்டார். 2014ல் அவர் குற்றமற்றவர் என்று நீதிமன்றம் விடுவித்தது. அதே வழக்கு தொடர்பாக, 2015ல் தொடரப்பட்ட மற்றொரு எப்.ஐ.ஆர்.,ஐ, உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இதுபோன்று 2016, 2022ல் அவருக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் இருந்து அவரது பெயர் நீக்கப்பட்டது. 2024ல் மேலும் இரண்டு வழக்குகள் மூடப்பட்டன. முடிந்த வழக்குகளை குறிப்பிட்டு அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. வீரேந்தர பப்பி, சிக்கிம் சென்றபோது, அவரது வீடு, வணிக வளாகங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தி உள்ளது. பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ், வழக்கு எதுவும் இல்லாத போதும், வீரேந்திர பப்பி கைது செய்யப்பட்டுள்ளார். இச்சட்டத்தின் கீழ், எம்.எல்.ஏ.,வை கைது செய்வதற்கு முன், சம்மன் அனுப்பப்பட வேண்டும். இருப்பினும், இவ்வழக்கில் கைது செய்யப்படும் வரை சம்மன் அனுப்பப்படவில்லை. கைதுக்கு சரியான காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார். நீதிபதி அருண் உத்தரவு: வீரேந்திர பப்பிக்கு எதிராக நான்கு எப்.ஐ.ஆர்., தள்ளுபடி செய்யப்பட்டதால், அமலாக்கத் துறையினரால் அவரை கைது செய்ய முடியவில்லை. ஐந்தாவது வழக்கு விசாரணையில் உள்ளது. இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட நீதிமன்றம், போலீசாரின் 'குற்றமற்றவர்' என்ற அறிக்கையை ஏற்றுக் கொண்டால், அமலாக்கத் துறையினர் கைதை எதிர்த்து நீதிமன்றத்தில் வீரேந்திர பப்பி முறையிடலாம். எனவே, அவரை விடுவிக்க முடியாது. மனுதாரரின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.