| ADDED : செப் 02, 2026 01:02 AM
புதுடில்லி: 'மேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கைக்கு, மத்திய அரசு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும்' என, தேசிய நீர் மாநாட்டில் கர்நாடக காங்., அரசு வலியுறுத்தியுள்ளது. டில்லியில் உள்ள சுஷ்மா சுவராஜ் பவனில், மத்திய ஜல்சக்தி துறை சார்பில் நடந்த தேசிய நீர் மாநாட்டில், கர்நாடக அரசின் நீர்ப்பாசன துறை அமைச்சர் செலுவராயசாமி நேற்று பேசியதாவது: மேகதாது அணை திட்டம் மாண்டியா, ராம்நகர், சாம்ராஜ் நகர், பெங்களூரு நகர மாவட்டத்திற்கு குடிநீர் வழங்கும். வறட்சி நிலவும் ஆண்டுகளில் நீர் மேலாண்மைக்கும் உதவும். அணை திட்டம் தொடர்பான, திருத்தப்பட்ட விரிவான திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கு மத்திய அரசு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும். கிருஷ்ணா நீர் தகராறு தீர்ப்பாயம் - 2 வழங்கிய தீர்ப்பை, மத்திய அரசு அரசிதழில் வெளியிட வேண்டும். குடிநீர் தேவைக்காக வடிவமைக்கப்பட்ட கலசா - பண்டூரி கூட்டு குடிநீர் திட்டத்திற்கு, நிலுவையில் உள்ள வன அனுமதியை விரைவாக வழங்க வேண்டும். பத்ரா மேலணை திட்டத்திற்காக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட, 5,300 கோடி ரூபாயை மத்திய அரசு விடுவிக்க வே ண்டும். இவ்வாறு அவர் பேசினார்.