உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  கர்நாடக மேல்சபை துணைத்தலைவர் ராஜினாமா

 கர்நாடக மேல்சபை துணைத்தலைவர் ராஜினாமா

பெங்களூரு: கடந்த, 2021ம் ஆண்டு நடந்த எம்.எல்.சி., தேர்தலில் சிக்கமகளூரு தொகுதியில் போட்டியிட்ட, பா.ஜ.,வின் பிரானேஷின் வெற்றி செல்லாது என உச்ச நீதிமன்றம் அறிவித்ததை தொடர்ந்து, அவர் நேற்று தனது மேல்சபை துணை தலைவர் மற்றும் எம்.எல்.சி., பதவியை ராஜினாமா செய்தார். இதனால், மேல்சபை துணை தலைவர் பதவி காங்கிரஸ் வசம் செல்கிறது. சிக்கமகளூரு உள்ளாட்சி அமைப்புகளின் மூலம், கர்நாடக மேல்சபைக்கு உறுப்பினர் தேர்வு செய்ய 2021ல் தேர்தல் நடந்தது. இத்தேர்தலில் பா.ஜ.,வின் பிரானேஷ் 1,188 ஓட்டுகள்; காங்கிரசின் காயத்ரி சாந்தேகவுடா 1,182 ஓட்டுகளும் பெற்றனர். வெறும் ஆறு ஓட்டுகளில் தோல்வி அடைந்த காயத்ரி, தேர்தலில் முறைகேடு நடந்ததாக கூறி, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இம்மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் கடந்த ஆண்டு ஜனவரி 29ம் தேதி அளித்த தீர்ப்பில், மறு ஓட்டு எண்ணிக்கை நடத்தும்படி கூறியது. ஆனால், உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் பிரானேஷ் மேல் முறையீடு மனு செய்தார். உத்தரவு இம்மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்து, மறு ஓட்டு எண்ணிக்கைக்கு உத்தரவிட்டது. இதன் முடிவுகளை 'சீல்' வைக்கப்பட்ட கவரில் சமர்ப்பிக்கவும் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவு பிறப்பித்தது. அதன்படி, கடந்த ஆண்டு பிப்ரவரி 28ம் தேதி, மறு ஓட்டு எண்ணிக்கை நடந்தது. அதன் முடிவுகளை 'சீல்' வைக்கப்பட்ட கவரில் உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் சமர்ப்பித்தது. அதேசமயம், பிரானேஷ் தாக்கல் செய்த மேல்முறையீடு மனு மீதான விசாரணையும் ஒரு பக்கம் நடந்து வந்தது. மறு ஓட்டு எண்ணிக்கையில், பிரானேஷை விட காயத்ரி சாந்தேகவுடா கூடுதல் ஓட்டுகள் பெற்றிருப்பதாக அறிவித்து, பிரானேஷின் எம்.எல்.சி., பதவியை பறித்து உச்ச நீதிமன்றம், கடந்த மாதம் 16ம் தேதி தீர்ப்பு வழங்கியது. பிரானேஷின் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. இருப்பினும், பிரானேஷ் தனது பதவியை ராஜினாமா செய்யாமல் மவுனம் காத்தார். இதனால், காயத்ரி பதவியேற்பதில் சிக்கல் நிலவியது. கடிதம் இந்நிலையில், பிரானேஷ் வேறு வழியின்றி நேற்று தனது எம்.எல்.சி., பதவியை ராஜினாமா செய்தார். இது குறித்து, அவர் மேல்சபை தலைவர் பசவராஜ் ஹொரட்டிக்கு கடிதம் எழுதி உள்ளார். 'கர்நாடக மேல்சபை துணைத் தலைவர் பதவியையும், எம்.எல்.சி., பதவியையும் தானாக முன்வந்து ராஜினாமா செய்கிறேன். எனது ராஜினாமாவை தயவு செய்து ஏற்றுக்கொள்ள வேண்டுகிறேன்' என கடிதத்தில் கூறப்பட்டு உள்ளது. இதன் மூலம், மேல்சபை துணைத் தலைவர் பதவி காங்கிரஸ் வசம் செல்கிறது. மேல்சபை தலைவரான பா.ஜ.,வின் பசவராஜ் ஹொரட்டி மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரும் முயற்சியில் காங்கிரஸ் ஈடுபட்டு உள்ளது. புதிய மேல்சபை தலைவர் விரைவில் தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், இரு அவைகளிலும் எளிதில் காங்கிரசால் மசோதாக்களை நிறைவேற்ற முடியும். பெரும்பான்மை காயத்ரி விரைவில் எம்.எல்.சி., பதவியேற்பார் என தகவல் வெளியாகி உள்ளது. தற்போது, மேல்சபையில் சுயேச்சை ஒருவரை சேர்த்தால் காங்கிரசின் பலம் 39 ஆக உள்ளது. காயத்ரி பதவியேற்றால் காங்கிரசின் பலம் 40 ஆக உயரும். பெரும்பான்மைக்கு 38 இடங்கள் மட்டுமே தேவைப்படும் நிலையில் காங்கிரஸ் அறுதி பெரும்பான்மையை பெறும். காங்கிரஸ் வசம் செல்லும் துணை தலைவர் பதவியை அமைச்சரவையில் இடம் கிடைக்காத அதிருப்தியில் உள்ள மூத்த உறுப்பினர்களுக்கு வழங்க காங்கிரஸ் திட்டமிட்டு உள்ளது. இந்த வரிசையில் காங்கிரஸ் தலைவர் பி.கே.ஹரிபிரசாத், நாகராஜ் யாதவ், ஐவன் டிசோசோ ஆகியோர் துணைத் தலைவர் பதவி பெற முட்டி மோதுகின்றனர். கர்நாடக மழைக்கால கூட்டத்தொடர் ஆகஸ்ட் 13 முதல் 27ம் தேதி வரை நடக்கிறது. இதற்கு முன்னதாகவே, காங்கிரஸ் எம்.எல்.ஏ., - எம்.எல்.சி.,க்கள் கூட்டத்தை கூட்டி, மேல்சபை தலைவர், துணைத் தலைவர் பதவிக்கு புதிய நபரை நியமிப்பது குறித்து ஆலோசனை செய்யும் வாய்ப்பு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை