கன்னட கொடிக்கு அங்கீகாரம் கேட்டு மத்திய அரசுக்கு கர்நாடகா கடிதம்
பெங்களூரு: கன்னட கொடிக்கு அங்கீகாரம் கேட்டு, மத்திய அரசுக்கு கடிதம் எழுதியதாக கன்னட, கலாசார துறை அமைச்சர் சிவராஜ் தங்கடகி தெரிவித்து உள்ளார்.கர்நாடகாவில் மஞ்சள், சிவப்பு நிறமுடைய கன்னட கொடி வழக்கத்தில் உள்ளது. இது மாநிலத்தின் கொடியாக கருதி, அரசு விழாவில் பயன்படுத்தப்படுகிறது. இது தவிர, தனியார் நிகழ்ச்சி, கன்னட அமைப்பினர், பொது மக்கள் என பலரும் பயன்படுத்தி வருகின்றனர். இதை தங்களின் அடையாளமாக கன்னடர்கள் கருதுகின்றனர்.இந்த கொடிக்கு அங்கீகாரம் கோரி, 2017ல் மத்திய அரசுக்கு, முதல்வர் சித்தராமையா தலைமையிலான அப்போதைய காங்கிரஸ் அரசு முதன் முறையாக கடிதம் எழுதியது. இது குறித்து, மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.இந்நிலையில், நேற்று சித்ரதுர்காவில் கன்னட, கலாசார துறை அமைச்சர் சிவராஜ் தங்கடகி அளித்த பேட்டி:கன்னட கொடிக்கு அங்கீகாரம் வழங்கப்படவில்லை. மத்திய அரசு உடனடியாக அங்கீகாரம் வழங்க வேண்டும். இது குறித்து, மத்திய அரசுக்கு கடிதம் எழுதி உள்ளேன். இதற்காக, மத்திய கலாசார அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை புது டில்லியில் நேரில் சந்திக்க திட்டமிட்டுள்ளேன். இதற்காக குழு உருவாக்கப்பட்டுள்ளது.தேசிய கொடிக்கு சமமாக இல்லாமல், சற்று உயரம் குறைவாகவே கன்னட கொடி ஏற்றப்படும். மாநிலங்களுக்கு தனி கொடி வைத்திருக்க, இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் தடை எதுவும் இல்லை. மக்களின் கலாசாரம், உணர்ச்சிகள், அடையாளத்தை மாநில கொடி பிரதிபலிக்கிறது.மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி, ஷோபா இருவரும் கர்நாடகாவை சேர்ந்தவர்கள். இருவருக்கும் கன்னட மொழியை பற்றி, நன்கு தெரியும். எனவே, அவர்கள் கொடிக்கு அங்கீகாரம் கிடைப்பதற்கு முயற்சி எடுக்க வேண்டும்.கன்னடத்திற்கு செம்மொழி அந்தஸ்து கொடுக்கப்பட்டது. ஆனால், தமிழ் மொழிக்கு வழங்கப்படும் நிதியை விட, கன்னடத்திற்கு குறைவாகவே வழங்கப்படுகிறது. கன்னட மேம்பாட்டுக்குத் தேவையான நிதியை உடனடியாக வழங்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.