| ADDED : நவ 22, 2025 05:12 AM
கலபுரகி: கொலை முயற்சி வழக்கில், காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குடும்பத்தின் அரசியல் எதிரியான, பா.ஜ., பிரமுகர் மணிகாந்தா ரத்தோட் கைது செய்யப்பட்டுள்ளார். கலபுரகி மாவட்டம், சித்தாபூரை சேர்ந்தவர் மணிகாந்தா ரத்தோட், 45. பா.ஜ., பிரமுகர். காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேயின் குடும்ப எதிரியாக கருதப்படுகிறார். கடந்த தேர்தலில் பிரியங்க் கார்கேவுக்கு எதிராக போட்டியிட்டு தோல்வி அடைந்தார். நேற்று முன்தினம் இரவு அப்சல்பூர் தாலுகாவில் உள்ள ஷிர்வாலா கிராமத்திற்கு மணிகாந்தா ரத்தோட் சென்றிருந்தார். அந்த கிராமத்தில் வசிக்கும் ரஷீத், இனாம்தார், ஜுபைர் ஆகியோர் கடவுள் பெயரால் மக்களை ஏமாற்றுவதாக, மணிகாந்தா ரத்தோடிடம், பா.ஜ., தொண்டர்கள் முறையிட்டனர். இதனால் அப்பகுதியில் உள்ள தர்கா முன், மணிகாந்தா ரத்தோட் தலைமையில் போராட்டம் நடந்தது. அப்போது ரஷீத், இனாம்தார், ஜுபைர் ஆகியோரை, மணிகாந்தா ரத்தோடும், பா.ஜ., தொண்டர்களும் சேர்ந்து தாக்கியதாக கூறப்படுகிறது. ஜுபைர் அளித்த புகாரில் மணிகாந்தா ரத்தோட் மீது சிர்வாரா போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்தனர். நேற்று அவர் கைது செய்யப்பட்டார்.