கே.எம்.எப்., தலைவர் பதவி: காங்., தலைவர்கள் போட்டி
பெங்களூரு : கே.எம்.எப்., எனும் கர்நாடக பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தலைவர் பதவிக்கு போட்டி வலுக்கிறது. தன் தம்பி சுரேஷை இப்பதவியில் அமர்த்த, துணை முதல்வர் சிவகுமார் முயற்சிக்கிறார். மற்றொரு பக்கம் முதல்வர் சித்தராமையா ஆதரவாளர்கள், இப்பதவி மீது கண் வைத்துள்ளனர். மாவட்ட அளவிலான பால் கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் நடந்ததை தொடர்ந்து, கே.எம்.எப்.,புக்கு தேர்தல் ஏற்பாடு நடக்கிறது. காங்கிரஸ் தலைவர்கள் சுரேஷ், நஞ்சேகவுடா, பீமா நாயக், ராகவேந்திர ஹிட்னால் ஆகியோர், இப்பதவி மீது கண் வைத்துள்ளனர். தன் தம்பி சுரேஷை, பாமுல் எனும் பெங்களூரு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தலைவர் பதவியில் அமர்த்தி அழகு பார்த்த, துணை முதல்வர் சிவகுமார், இப்போது கே.எம்.எப்., தலைவராக்கும் முயற்சியில் இருக்கிறார். மற்றொரு பக்கம் முதல்வர் சித்தராமையாவுக்கு நெருக்கமான எம்.எல்.ஏ., ராகவேந்திரா ஹிட்னால், இப்பதவியை எதிர்பார்க்கிறார். சுரேஷும், ராகவேந்திர ஹிட்னாலும் அவ்வப்போது ஆலோசனை கூட்டம் நடத்துகின்றனர். நேற்று பொதுப்பணித்துறை அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளியை சந்தித்து, ராகவேந்திரா ஹிட்னால் ஆலோசனை நடத்தினார். இவர் ஏற்கனவே ராபகொவி (ராய்ச்சூர், பல்லாரி, கொப்பால், விஜயநகரா) பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க தலைவராக பதவி வகிக்கிறார். இப்போது கே.எம்.எப்., தலைவர் பதவிக்காக முயற்சிக்கிறார். இதற்கிடையே தற்போதைய தலைவர் பீமா நாயக்கும், பதவியில் நீடிக்க முயற்சிக்கிறார். மாலுார் எம்.எல்.ஏ., நஞ்சேகவுடாவும் முக்கிய தலைவர்கள் மூலம், கே.எம்.எப்., தலைவர் பதவியில் அமர விரும்புகிறார்.