கே.ஆர்., மார்க்கெட் சுத்தம் மாநகராட்சி கமிஷனர் உத்தரவு
பெங்களூரு: ''கே.ஆர்., மார்க்கெட் பகுதியை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்,'' என அதிகாரிகளுக்கு மாநகராட்சி கமிஷனர் மஹேஸ்வர ராவ் உத்தரவிட்டார்.பெங்களூரு சிட்டி கே.ஆர்., மார்க்கெட் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் குப்பைகள் அதிக அளவில் காணப்படுகின்றன. இதனால், அப்பகுதியில் துர்நாற்றம், நோய் பரவும் அபாயம் இருப்பதாக புகார்கள் எழுந்தன.இதை கருத்தில் கொண்ட மாநகராட்சி கமிஷனர் மஹேஸ்வர ராவ் நேற்று மேற்கு மண்டல கமிஷனர் சுரால்கர் விகாஸ் கிஷோர், தலைமை பொறியாளர்கள் லோகேஷ், பசவராஜ் கபடே, ராஜேஷ் ஆகியோருடன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.இது குறித்து, நேற்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:கே.ஆர்., மார்க்கெட் பகுதியில் உள்ள குப்பைகளை, 'பிரஷர் ஜெட்டிங் மிஷின்' மூலம் அகற்ற வேண்டும். சந்தையில் கொட்டப்படும் கழிவுகள் உடனடியாக அகற்றப்படுகிறதா என்பதை மார்ஷல்கள், மேற்பார்வையாளர்கள் பார்வையிட வேண்டும்.மார்க்கெட்டில் உள்ள வியாபாரிகள், தங்கள் கடைகளுக்கான இடங்களை ஆக்கிரமிப்பு செய்திருந்தால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். கடைகளுக்கு இடையே உள்ள சரியான இடைவெளியை நிர்வகிப்பதற்கு திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது.போக்குவரத்து போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட பல வாகனங்கள், சந்தையில் உள்ள பார்க்கிங் பகுதியில் நிறுத்தப்பட்டு உள்ளன. இந்த வாகனங்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.