உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / அமைச்சர் பதவியை விடத்தயார் கிருஷ்ணபைரே கவுடா தடாலடி

அமைச்சர் பதவியை விடத்தயார் கிருஷ்ணபைரே கவுடா தடாலடி

பெங்களூரு: ''கட்சி மேலிடம் கூறினால் பதவியை விட்டுக் கொடுக்க தயாராக உள்ளேன்,'' என, மாநில வருவாய் அமைச்சர் கிருஷ்ணபைரே கவுடா கூறி உள்ளார். பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி: கடந்த 2023 சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த சில நாட்களில், இரண்டரை ஆண்டிற்கு பின், அமைச்சரவையில் மாற்றம் செய்ய வேண்டும் என முடிவு எடுக்கப்பட்டது. தகுதியான எம்.எல்.ஏ.,க்களுக்கும், அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்பதற்காக எடுக்கப்பட்ட முடிவு அது. கட்சி மேலிடம் கூறினால், என் அமைச்சர் பதவியை விட்டுக் கொடுக்க தயாராக உள்ளேன். நான் மூன்று முறை அமைச்சராக இருந்துவிட்டேன். எதிர்பார்த்ததை விட கட்சி எனக்கு அதிகம் கொடுத்துள்ளது. அமைச்சராக இருப்பதால், என் பேட்ராயனபுரா தொகுதி மீது முழுமையாக கவனம் செலுத்த முடியவில்லை. எம்.எல்.ஏ.,வாக இருந்து தொகுதிக்கு நான் செய்த பணிகளில் திருப்தி அடைகிறேன். ஆனால் இன்னும் செய்ய வேண்டிய பணி நிறைய உள்ளது. முதல்வர் மாற்றம் குறித்து, கட்சி மேலிடம் முடிவு எடுக்கும். முதல்வர் பதவி தொடர்பாக எம்.எல்.சி., யதீந்திரா கூறிய கருத்துக்கு நான் பதில் அளிக்க மாட்டேன். இதுபோன்ற விஷயங்களில் கவனம் செலுத்துவது இல்லை. பா.ஜ., தலைவர்கள் அதிகார பேராசை கொண்டவர்கள். அவர்கள் கையில் அதிகாரம் இல்லாவிட்டால், அரசுக்கு எதிராக கிளர்ச்சி செய்வர். நாங்கள் பொறுப்புடன் செயல்படுகிறோம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்து இருக்கும். ஐந்து விரல்களும் சமமானது அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி