உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / கே.ஆர்.எஸ்., இருப்பு 15 டி.எம்.சி., பெங்களூரில் குடிநீர் பிரச்னை அபாயம்

கே.ஆர்.எஸ்., இருப்பு 15 டி.எம்.சி., பெங்களூரில் குடிநீர் பிரச்னை அபாயம்

மாண்டியா: கே.ஆர்.எஸ்., அணையில் 15 டி.எம்.சி., தண்ணீர் மட்டுமே இருப்பு இருப்பதால், பெங்களூரில் குடிநீர் பிரச்னை ஏற்படும் வாய்ப்பு உள்ளது.மாண்டியா, ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா கண்ணம்பாடி கிராமத்தில், காவிரி ஆற்றின் குறுக்கே கே.ஆர்.எஸ்., அணை உள்ளது. இந்த அணையின் தண்ணீர் கர்நாடகா, தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரமாக உள்ளது. பெங்களூரு நகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. கடந்த ஆண்டு பெய்த தென்மேற்கு பருவமழையால் அணை நிரம்பியது.அணையில் இருந்து தமிழகத்திற்கு காவிரி ஆறு வழியாகவும், கர்நாடகா விவசாயிகளுக்கு கால்வாய் வழியாகவும் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்நிலையில் பெங்களூரு உட்பட மாநிலம் முழுதும் மழை பெய்து வரும் நிலையில், கே.ஆர்.எஸ்., அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் மட்டும் மழை பெய்யவில்லை. இதனால் அணையில் நீர்இருப்பு குறைந்து கொண்டே வருகிறது.மொத்த கொள்ளளவில் 49.45 டி.எம்.சி., கொண்ட அணையின் நீர் இருப்பு நேற்று 15.44 டி.எம்.சி.,யாக இருந்தது. இதில் 7 டி.எம்.சி., 'டெட் ஸ்டோரேஜ்' ஆகும். இப்படி பார்த்தால் அணையில் இன்னும் 8.44 டி.எம்.சி., தண்ணீர் மட்டுமே உள்ளது. இந்த தண்ணீரை தான் விவசாயத்திற்கும், பெங்களூரு நகருக்கு குடிநீர் வழங்கவும் பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.மாநிலத்தில் இன்னும் தென்மேற்கு பருவமழை துவங்கவில்லை. இம்மாத இறுதிக்குள் துவங்கி அணையின் நீர்பிடிப்பு பகுதியில் அதிக மழை பெய்தால் அணையின் நீர்இருப்பு வேகமாக உயரும் வாய்ப்பு உள்ளது. பருவமழை துவங்குவதில் ஏதேனும் தாமதம் ஏற்பட்டால், பெங்களூரு நகருக்கு குடிநீர் வினியோகம் செய்வதில் பிரச்னை ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. தென்மேற்கு பருவமழை கடந்த 2023ம் ஆண்டில் சரியாக பெய்யாததால், கே.ஆர்.எஸ்., நீர் இருப்பு குறைந்தது. பெங்களூரில் குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடியது. டேங்கர்களில் வினியோகிக்கப்பட்ட தண்ணீரை அதிக விலை கொடுத்து மக்கள் வாங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை