உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / மைசூரில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைவு பா.ஜ., - எம்.பி., யதுவீர் பாய்ச்சல்

மைசூரில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைவு பா.ஜ., - எம்.பி., யதுவீர் பாய்ச்சல்

மைசூரு: “அரண்மனை முன்பாகவே, ஒரு கொலை நடந்தது. இப்போது பலுான் விற்கும் சிறுமி கொலை நடந்துள்ளது. முதல்வர் சித்தராமையாவின் சொந்த மாவட்டத்திலேயே, குற்றங்கள் அதிகரிக்கின்றன,” என, பா.ஜ., - எம்.பி., யதுவீர் குற்றஞ்சாட்டினார். மைசூரில் நேற்று அவர் அளித்த பேட்டி: தசரா முடிந்த பின்னரும், மாவட்டத்தில் பண்டிகை சூழ்நிலை உள்ளது. ஆனால் இரண்டு நாட்களாக நடக்கும் சம்பவங்கள், மிகவும் வருத்தம் அளிக்கின்றன. மைசூரு வரலாறு துாய்மையான ஆட்சிக்கு பெயர் பெற்றது. ஆனால் சமீப நாட்களாக, சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. இதற்கு முன்பு உதயகிரி போலீஸ் நிலையம் மீது கல் வீச்சு சம்பவம் நடந்தது. 340 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருளை மஹாராஷ்டிரா போலீசார் கண்டுபிடித்தனர். அரண்மனை முன்பகுதியிலேயே, ஒரு கொலை நடந்தது. நேற்று முன் தினம் சிறுமி பலாத்காரத்துக்கு ஆளாகி, கொலை செய்யப்பட்டுள்ளார். பலுான் விற்க வந்த சிறுமிக்கு இந்த நிலை. மைசூரில் இதற்கு முன்பு இப்படிப்பட்ட சம்பவங்கள் நடந்ததே இல்லை. நகரின் இதய பகுதியிலேயே குற்றங்கள் நடக்கின்றன. குற்றவாளிகளுக்கு சட்டத்தை பற்றிய பயம் இல்லை. முதல்வரின் சொந்த மாவட்டத்திலேயே குற்றங்கள் நடக்கின்றன; அவரால் தடுக்க முடியவில்லை. தேர்தல் வந்தால் மட்டுமே, அவருக்கு சொந்த மாவட்டம் நினைவுக்கு வருகிறது. பதவிக்கு வந்த பின்னரும், தன் மாவட்டத்தை மேம்படுத்த வேண்டும். சட்டம் - ஒழுங்கு பாழாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இதை முதல்வர் சித்தராமையா செய்யவில்லை. எதிர்க்கட்சியாக எங்கள் வேலையை செய்கிறோம். மக்களின் பிரச்னைகளை பற்றி குரல் எழுப்புகிறோம். மக்கள் அனைத்தையும் கவனிக்கின்றனர். இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ