உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை முதல்வருக்கு ரத்தத்தில் கடிதம்

 மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை முதல்வருக்கு ரத்தத்தில் கடிதம்

உத்தரகன்னடா: உத்தரகன்னடா மாவட்டத்தில், 'மல்டி ஸ்பெஷாலிட்டி' மருத்துவமனை கட்ட வேண்டும் என கோரி, முதல்வருக்கு ரத்தத்தில் கடிதம் எழுதப்பட்டுள்ளது. கர்நாடாவின் பெரும்பாலான மாவட்டங்களில், அரசு மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகள் உள்ளன. ஆனால், உத்தரகன்னடா மாவட்டத்தில், இத்தகைய மருத்துவமனை இல்லை. நோயாளிகள் அவசர சிகிச்சைக்கு, தொலைவில் உள்ள மாவட்டங்களுக்கு அலைய வேண்டியுள்ளது. அங்கு அழைத்து செல்லும் போது, வழியில் உயிரிழந்த உதாரணங்களும் உள்ளன. உத்தரகன்னடா மாவட்டத்தில் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கட்ட வேண்டும் என, பல ஆண்டுகளாக மக்கள் மன்றாடியும், மாநில அரசு பொருட்படுத்தவில்லை. தற்போது மாவட்ட இளைஞர்கள், ரத்தத்தில் கடிதம் எழுதி, அரசின் கவனத்தை ஈர்க்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர். பட்கலை சேர்ந்த மஸ்தப்பா நாயக் பெளசே தலைமையிலான குழுவினர், அரசுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: உத்தரகன்னடாவில் விபத்துகள் நடந்து, நோயாளிகளுக்கு அவசர சிகிச்சை தேவைப்பட்டால், சிகிச்சை அளிக்கும் திறன் கொண்ட மருத்துவமனை இல்லை. இதுபோன்ற சூழ்நிலை ஏற்பட்டால், உடுப்பிக்கோ அல்லது மங்களூருக்கோ, ஹூப்பள்ளிக்கோ செல்ல வேண்டியுள்ளது. எங்கள் மாவட்டத்துக்கு ஒரு மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை தேவை என்பது, நீண்ட நாள் வேண்டுகோளாகும். இதற்காக பல போராட்டங்கள் நடந்துள்ளன. சரியான நேரத்தில் சிகிச்சை கிடைக்காமல், எத்தனையோ உயிர்கள் போய்விட்டன. எங்கள் மாவட்டத்தில் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கட்டுங்கள். இல்லையென்றால் தற்கொலை செய்து கொள்ள அனுமதி தாருங்கள். மாவட்டத்தின் 7 லட்சம் மக்கள் சார்பில், மருத்துவமனை கோரி, முதல்வருக்கு தபால் அட்டை மூலம் வேண்டுகோள் விடுக்கப்படும். இதுவரை நடந்த போராட்டங்களுக்கு பணியாத அரசு, ரத்தத்தில் எழுதிய இந்த கடிதத்துக்கு செவி சாய்க்கிறதா என, பார்க்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ