கணவரை கொன்ற மனைவி கள்ளக்காதலருக்கு ஆயுள்
தாவணகெரே: கணவரை கொன்று, உடலை பூஜை அறையில் புதைத்த மனைவி மற்றும் கள்ளக்காதலருக்கு ஆயுள் தண்டனை விதித்து, தாவணகெரே நீதிமன்றம் தீர்ப்பளித்தது.தாவணகெரே மாவட்டம், ஹொன்னாளி தாலுகாவின், நெலசொன்னா கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமண், 60. இவரது மனைவி கங்கம்மா, 54. தம்பதிக்கு உஷா, 25, என்ற மகள் உள்ளார்.கங்கம்மாவுக்கு, இதே பகுதியில் வசிக்கும் ஜெகதீஷ், 64, என்பவருடன் கள்ளத்தொடர்பு இருந்தது. வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், ஜெகதீஷை வீட்டுக்கு வரவழைத்து, உல்லாசமாக இருப்பார். இது கணவருக்கு தெரிந்தது. மனைவியை கண்டித்தார்.ஜெகதீஷுடனான தொடர்பை துண்டித்துக் கொள்ளும்படி எச்சரித்தார். ஆனால், கங்கம்மா திருந்தவில்லை. குடும்பத்தில் பிரச்னை ஏற்பட்டது. இதனால் கணவரை கொலை செய்ய முடிவு செய்தார்.கடந்த 2015 செப்டம்பர் 8ம் தேதி இரவு, லட்சுமண் துாங்கிக் கொண்டிருந்தபோது, கங்கம்மா, ஜெகதீஷை வீட்டுக்கு வரவழைத்தார். இருவரும் சேர்ந்து லட்சுமணனை கழுத்தை நெரித்துக் கொலை செய்தனர். உடலை வெளியே கொண்டு சென்றால், சிக்குவோம் என்ற பயத்தில், பூஜை அறையில் பள்ளம் தோண்டி புதைத்தனர்.கொலையை பார்த்த மகள் உஷாவை, நடந்ததை வெளியே சொன்னால், அவரையும் கொலை செய்வதாக மிரட்டினர்.ஆனால் இதற்கு பயப்படாத அவர், கிராமத்தினரிடம் விஷயத்தை கூறி, அவர்களின் உதவியுடன் ஹொன்னாளி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசாரும் கிராமத்துக்கு வந்து, லட்சுமண் சடலத்தை தோண்டி எடுத்தனர்.கங்கம்மாவையும், அவரது கள்ளக்காதலர் ஜெகதீஷையும் கைது செய்தனர். தாவணகெரே மாவட்ட நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். விசாரணையில் குற்றம் உறுதியானதால், இருவருக்கும் ஆயுள் தண்டனை, தலா 55,000 ரூபாய் அபராதம் விதித்து, நீதிபதி அண்ணய்யனவர், நேற்று தீர்ப்பளித்தார்.