ராபர்ட்சன் பேட்டை பஸ் நிலையத்தில் மது கடைகளா? கலால் துறைக்கு தங்கவயல் நகராட்சி கடிதம்
தங்கவயல்: ராபர்ட் சன் பேட்டை பஸ் நிலையத்தில் மதுக்கடைகளுக்கு அளிக்கப்பட்ட அனுமதியை ரத்து செய்யும்படி, கலால் துறைக்கு நகராட்சி சார்பில் கடிதம் எழுதப்படுமென நகராட்சி கவுன்சில் கூட்டத்தில் ஆணையர் தெரிவித்தார். ஆறு மாதங்களுக்கு பிறகு, தங்கவயல் நகராட்சியின் மாதாந்திர கவுன்சில் கூட்டம் நகராட்சியின் கூட்ட அரங்கில் அதன் தலைவர் இந்திரா காந்தி தலைமையில் நேற்று நடந்தது. துணைத் தலைவர் ஜெர்மன், ஜெயின் வார்டு கவுன்சிலர் ரமேஷ் ஜெயின் தவிர மற்ற 33 கவுன்சிலர்களும் கூட்டத்தில் பங்கேற்றனர். காலை 11:00 மணிக்கு துவங்கிய கூட்டம், பகல் 1:40 மணி வரை நடந்தது. கூட்டத்தில் கவுன்சிலர்கள் பல்வேறு பிரச்னைகள் குறித்து பேசினர். வேணுகோபால், ம.ஜ.த.,: நகராட்சி வளாகத்தில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலை சேதமடைந்துள்ளது. இதை உலோக சிலையாக மாற்ற வேண்டும் என்று இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 15 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்குவதாக தெரிவிக்கப்பட்டது. சிலை விழுந்த பின்னர் தான் முடிவு வருமா? ஆஞ்சநேயலு, நகராட்சி ஆணையர்: இதுபற்றி கலெக்டருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் ஒப்புதல் வரவில்லை. ஒதுக்கிய நிதி தயாராக உள்ளது. டி.ஜெரபால், காங்.,: ஆண்டர்சன் பேட்டை பஸ் நிலைய சதுக்கத்தில் வைத்துள்ள ராஜிவ் சிலையும் சேதமடைந்துள்ளது. அதையும் மாற்ற 10 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்படும் என்றனர். என்ன ஆனது? ஆணையர்: அதுவும் பரிசீலனையில் உள்ளது. மோனிசா, காங்.,: நகராட்சியில் 7 முறை தொடர்ந்து கவுன்சிலர், 3 முறை எம்.எல்.ஏ.,வாக இருந்தவர். அவரது பெயரை நகராட்சி கூட்ட அரங்கிற்கு பெயர் சூட்ட வேண்டும் என்று கோரிக்கை எழுப்பப்பட்டது. என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? பிரவீன் குமார், சுயே.: பக்தவசலம் போல் தொடர்ந்து ஒருவர் உறுப்பினராக, தலைவராக இருந்ததில்லை. அவரது படத்தை நகராட்சி கூட்ட அரங்கில் திறக்க வேண்டும் என்று கோரி 5 ஆண்டுகள் ஆகின்றன. இதுவரை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? வி.முனிசாமி, தலைவர், நிலைக்குழு: என் அப்பா, எனக்கு வைத்த பெயர் முனிசாமி. ஆனால் 'வள்ளல் முனிசாமி' என்று எனக்கு பெயர் சூட்டியவர் பக்தவச்சலம். அதுதான் தற்போது வழக்கத்தில் உள்ளது. அவர் மீது எங்களுக்கு மிகுந்த கவுரவம் உள்ளது. அவரது படம் அரங்கில் இடம் பெற செய்வோம். டி.ஜெயபால்: ராபர்ட் சன் பேட்டை மையப் பகுதியில் உள்ள சுராஜ் மல் சதுக்கம் பெயரை, அம்பேத்கர் சதுக்கம் என்று பெயர் சூட்ட வேண்டும். அதேபோல டென்னன்ஸ் சதுக்கத்தில் இருந்து ரிசர்வ் போலீஸ் நிலையத்தை இணைக்கும் சாலைக்கு டாக்டர் ராஜேந்திரகுமார் பெயரை சூட்ட வேண்டும். ஆணையர்: ராபர்ட்சன் பேட்டை பஸ் நிலையம் நவீன மயமாக்கப்படும். இதற்கான திட்ட அறிக்கை தயாரிக்க வேண்டும். கவுன்சிலர்கள்: கர்நாடக மாநிலத்தில் எந்த ஒரு பஸ் நிலையத்திலும் மது கடைகளுக்கு அனுமதி இல்லை. ஆனால் ராபர்ட் சன் பேட்டை பஸ் நிலையத்தில் மட்டும் அனுமதி கொடுத்தது யார்? அதை ரத்து செய்யுங்கள். ஆணையர்: மது விற்பனை கடைகளுக்கு அனுமதி கொடுத்தது நாங்கள் அல்ல; கலால் துறை. எனவே கலால் துறைக்கு நகராட்சி கடிதம் எழுதும். பஸ் நிலையத்தில் மதுக்கடைகள் அனுமதியை ரத்து செய்ய வலியுறுத்தப்படும். பி.தங்கராஜ்., மார்க்., கம்யூ.: ராபர்ட் சன் பேட்டை பஸ் நிலையம் மட்டுமல்ல, ஆண்டர்சன் பேட்டை பஸ் நிலையத்தையும் புதுப்பிக்க வேண்டும். இங்கிருந்து சிட்டி பஸ் சர்வீஸ் துவங்க வேண்டும். தங்கவயல் நகராட்சிக்கு தங்கச்சுரங்க நிறுவனம், 4.29 கோடி ரூபாயும், பெமல் நிறுவனம் 17 கோடி ரூபாயும் வரியாக செலுத்தியுள்ளன. மின் விளக்குகளுக்கு மட்டுமே 8-9 கோடி ரூபாய் வழங்கியுள்ளன. யார் அந்த பாரத் எண்டர்பிரைசஸ்? மாதந்தோறும் பராமரிப்புக்கு 4 லட்சம் ரூபாய் தனியாக வழங்கப்படுகிறது. ஆனால், பல மின் கம்பங்களில் விளக்குகள் எரிவதில்லை. இதற்கு யார் பொறுப்பு? பிளீச்சிங் பவுடர், பூச்சிகொல்லி மருந்து தெளிப்பும் இல்லை. ஆனால், 80 ஆயிரம் ரூபாய் கணக்கு காட்டப்பட்டுள்ளது. கொசுத்தொல்லை அதிகரித்துள்ளது. எங்குமே புதர் மயமாக உள்ளது. இதை சீர்படுத்தவில்லை. நகராட்சி தலைவர்: தங்கவயல் நகராட்சியின் 35 வார்டுகளிலுமே 'ஆக் ஷன் கிளீன்' திட்டம் துவங்கப்படும். வார்டுகளில் நகராட்சி பணிகளை மேற்கொள்ள நகராட்சி காரில் ரவுடிகள் வந்து பார்வையிட்டனர். வார்டு கவுன்சிலர்களுக்கு என்ன மரியாதை உள்ளது?