மேலும் செய்திகள்
55 மாவட்ட தலைவர்களுக்கு தமிழக காங்கிரசில் கல்தா?
01-Jun-2025
பெங்களூரு: கர்நாடக மேல்சபையில் காலியாக உள்ள நான்கு நியமன உறுப்பினர் பதவிகளுக்கான பட்டியலுக்கு காங்கிரஸ் மேலிடம் 'கிரீன் சிக்னல்' கொடுத்துள்ளது. இப்பட்டியலை கவர்னரின் ஒப்புதலுக்கு, முதல்வர் சித்தராமையா தலைமையிலான அரசு அனுப்பியுள்ளது. இவர்களை கவர்னர் நியமித்த பின், மேல்சபையில் காங்கிரசின் பலம் மேலும் அதிகரிக்கும்.கர்நாடக மேல்சபைக்கு, ஆளுங்கட்சியான காங்கிரஸ் சார்பில் நியமிக்கப்பட்டிருந்த வெங்கடேஷ், பிரகாஷ் ராத்தோட் ஆகியோரின் பதவிக் காலம், கடந்த அக்டோபர் 29ம் தேதியுடன் முடிவடைந்தது. ம.ஜ.த., நியமன உறுப்பினர் திப்பேசாமியின் பதவிக்காலம் கடந்த ஜனவரி 27ம் தேதியுடன் முடிந்தது. ராஜினாமா
பா.ஜ., - எம்.எல்.சி.,யாக இருந்த யோகேஸ்வர், சென்னப்பட்டணா தொகுதியில் தனக்கு சீட் வழங்கவில்லை என்ற கோபத்தில், பா.ஜ.,வில் இருந்து விலகினார்; எம்.எல்.சி., பதவியை ராஜினாமா செய்தார்.எனவே மேல்சபையின் நான்கு நியமன உறுப்பினர் பதவிகள் காலியாக உள்ளன. இந்த இடங்களை பிடிக்க, காங்கிரசில் பலர் முட்டி மோதினர். முதல்வர், துணை முதல்வருக்கு நெருக்கமானவர்கள், தங்களை மேல்சபைக்கு நியமிக்கும்படி நெருக்கடி கொடுத்து வந்தனர்.இதற்கிடையே மேல்சபைக்கு அரசியல் பிரமுகர்கள், அவர்களின் ஆதரவாளர்களை நியமிக்க, மேல்சபை தலைவர் பசவராஜ் ஹொரட்டி எதிர்ப்புத் தெரிவித்தார்.இதுதொடர்பாக முதல்வர் சித்தராமையாவுக்கும், துணை முதல்வர் சிவகுமாருக்கும் கடிதம் எழுதிய அவர், 'மேல்சபை சிந்தனையாளர்களின் கூடம்; மருத்துவம், இலக்கியம், கல்வி, ஊடகம் என, பல்வேறு துறைகளில் சாதனை செய்தவர்களை, மேல்சபைக்கு நியமியுங்கள். குறுக்கு வழியில் பதவிக்கு வர அனுமதிக்காதீர்கள்' என, குறிப்பிட்டு இருந்தார். முக்கியத்துவம்
ஏற்கனவே பதவியை அனுபவித்த பிரகாஷ் ராத்தோட், வெங்கடேஷ் மீண்டும் தங்களுக்கே வாய்ப்பு கேட்டு பிடிவாதம் பிடித்தனர். அதேபோன்று ஒக்கலிகர் சமுதாயத்தின் சங்கர், வினய் கார்த்திக், பிற்படுத்தப்பட்டோர் பிரிவுகள் ஆணையத்தின் முன்னாள் தலைவர் துவாரகா நாத் உட்பட, பலரும் வாய்ப்பு கேட்டு நடையாய் நடந்தனர்.மேல்சபை தலைவரின் கருத்தை பொருட்படுத்தாத காங்கிரஸ் அரசு, வழக்கம் போன்று, அரசியல்வாதிகளுக்கு முக்கியத்துவம் அளித்துள்ளது.சமுதாய வாரியாக அலசி ஆராய்ந்த கர்நாடக காங்கிரஸ் தலைமை, மேல்சபையின் நான்கு நியமன உறுப்பினர் இடங்களுக்கு, மாநில காங்கிரஸ் ஊடக பிரிவு தலைவர் ரமேஷ் பாபு, வெளிநாடு வாழ் இந்தியர் கமிட்டி துணை தலைவி ஆர்த்தி ஷெட்டி, தலித் தலைவர் சாகர், சித்தராமையா முதன்முறை முதல்வராக இருந்தபோது, அவரது ஊடக ஆலோசகராக இருந்த மூத்த பத்திரிகையாளர் தினேஷ் அமீன் மட்டு ஆகியோரை தேர்வு செய்தது. கண்டு கொள்ளாத மேலிடம்
ஒப்புதலுக்காக காங்., மேலிடத்துக்கு அனுப்பியது. ஆனால், மூன்று மாதங்களாக இந்த பட்டியலை கண்டு கொள்ளவில்லை. இதற்காக, பல முறை முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் டில்லிக்கு சென்று வந்தனர். எதுவும் கைகூடவில்லை.ஒரு வழியாக இப்பட்டியலுக்கு கட்சி மேலிடம் தற்போது 'கிரீன் சிக்னல்' கொடுத்துள்ளது. எனவே நால்வர் கொண்ட பட்டியலை, கவர்னருக்கு நேற்று முன் தினம், மாநில அரசு அனுப்பி வைத்தது. இவர்களை இம்மாத இறுதியிலோ அல்லது ஜூலை மாதமோ, மேல்சபைக்கு கவர்னர் தாவர்சந்த் கெலாட் நியமிக்கும் வாய்ப்புள்ளது.அதன் பின், மேல்சபையில் ஆளுங்கட்சியான காங்கிரஸ் பலம் அதிகரிக்கும். இதனால், எதிர்க்கட்சியான பா.ஜ., கூட்டணியை காங்கிரஸ் சம பலத்துடன் எதிர்கொள்ளும்.ம.ஜ.த.,வின் சில எம்.எல்.சி.,க்களை ஈர்த்து, மேல்சபை தலைவர் பதவியை பெற காங்கிரஸ் தரப்பு முயற்சிக்கக் கூடும் என்று கூறப்படுகிறது. இதையறிந்த பா.ஜ.,வின் பசவராஜ் ஹொரட்டி, பதவியை ராஜினாமா செய்ய தயாராக இருப்பதாக, சவால் விடுத்துள்ளார்.
01-Jun-2025