சிவகுமாருடன் நீண்ட ஆலோசனை பா.ஜ.,வுக்கு சித்தேஸ்வர் டாட்டா?
பெங்களூரு: பா.ஜ., முன்னாள் எம்.பி., சித்தேஸ்வர், துணை முதல்வர் சிவகுமாரை, அவரது இல்லத்தில் சந்தித்து பேசியது, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.தாவணகெரே லோக்சபா தொகுதியின், பா.ஜ., முன்னாள் எம்.பி., சித்தேஸ்வர். இவர் கடந்த 2024ல் நடந்த லோக்சபா தேர்தலில் போட்டியிட சீட் எதிர்பார்த்தார். ஆனால் கட்சி மேலிடம், அவரது மனைவி காயத்ரியை களமிறக்கியது. மனைவியை வெற்றி பெற வைக்க சித்தேஸ்வர், கடுமையாக போராடினார்; காயத்ரி வெற்றி பெற முடியவில்லை. அமைச்சர் மல்லிகார்ஜுனாவின் மனைவி பிரபா, காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.தன் மனைவியின் தோல்விக்கு, பா.ஜ.,வின் சில தலைவர்களே காரணம் என, சித்தேஸ்வர் பகிரங்கமாகவே குற்றம் சாட்டினார். உள்குத்து வேலை செய்து, கட்சி வேட்பாளரையே தோற்கடித்ததாக வெதும்பினார். அதன்பின் கட்சி பணிகளில் இருந்து, ஒதுங்க துவங்கினார். ஆலோசனை கூட்டங்களிலும் பங்கேற்கவில்லை. பசனகவுடா கவுடா பாட்டீல் எத்னால் கோஷ்டியில் சேர்ந்து கொண்டு, மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திராவுக்கு எதிராக பேசினார். எத்னால் கட்சியை விட்டு நீக்கிய பின், சித்தேஸ்வர் மவுனமானார்.இந்நிலையில் பெங்களூரு வந்த சித்தேஸ்வர், துணை முதல்வர் சிவகுமாரை, சதாசிவநகர் இல்லத்தில், நேற்று காலையில் சந்தித்தார். இருவரும் நீண்ட நேரம் ஆலோசித்ததாக கூறப்படுகிறது. பா.ஜ.,வின் முன்னாள் எம்.பி.., சித்தேஸ்வர், துணை முதல்வரை சந்தித்தது, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சித்தேஸ்வர் பா.ஜ.,வுக்கு 'டாட்டா' காட்டி, காங்கிரசுக்கு தாவ தயாராகிறாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது.