மாணவி பலி வழக்கு லாரி டிரைவர் கைது
ஆவலஹள்ளி: மாணவி மீது லாரியை ஏற்றிவிட்டு தப்பி சென்ற லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர். பெங்களூரு, ஆவலஹள்ளி பகுதியை சேர்ந்தவர் தனுஸ்ரீ, 22. இவர், கடந்த மாதம் 29ம் தேதி கல்லுாரிக்கு, ஸ்கூட்டியில் சென்று கொண்டிருந்தார். பூஜிகெரே கிராஸ் அருகே சாலையில் சென்று கொண்டிருக்கும் போது, சாலையில் இருந்த பெரிய அளவிலான பள்ளத்தால், நிலை தடுமாறி கீழே விழுந்தார். பின்னால் வந்த லாரி அவர் மீது ஏறியதில், மாணவி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். லாரியுடன், டிரைவர் தப்பி சென்றார். இச்சம்பவம் நகரில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஆவலஹள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து, லாரி டிரைவரை தேடினர். விபத்து நடந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், லாரியின் நம்பரை கண்டுபிடித்தனர். இதை வைத்து சோதனை செய்ததில், மேற்கு வங்கத்தை சேர்ந்த லாரி டிரைவர் ஜெரால்டு, 30 என்பவரை நேற்று கைது செய்ததாக, ஆவலஹள்ளி போலீசார் தெரிவித்தனர்.