உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  விபத்தை ஏற்படுத்தாமல் உயிர் விட்ட லாரி ஓட்டுநர்

 விபத்தை ஏற்படுத்தாமல் உயிர் விட்ட லாரி ஓட்டுநர்

பாகல்கோட்: மாரடைப்பு ஏற்பட்ட நிலையிலும், லாரியை ஓரமாக நிறுத்தி ஓட்டுநர் உயிரிழந்தார். ஜம்மு - காஷ்மீரின், கதுவா மாவட்டம், பசோளி நகரை சேர்ந்தவர் இன்சார் அகமது, 60. இவர் லாரி ஓட்டுநராக பணியாற்றினார். இவர் பணி நிமித்தமாக, தன் லாரியுடன் பாகல்கோட் மாவட்டம், குஷ்டகிக்கு வந்திருந்தார். நேற்று மதியம் இளகல் நகரின் அருகில் உள்ள நெடுஞ்சாலையில், சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு கடுமையான நெஞ்சு வலி ஏற்பட்டது. வலி அதிகமாக இருந்தும், பயப்படாத இன்சார் அகமது, லாரி கட்டுப்பாட்டை இழந்தால் அசம்பாவிதம் ஏற்படும் என்பதை உணர்ந்து, உடனடியாக வேகத்தை குறைத்தார். எந்த வாகனம் மீதும் மோதிவிடாமல், பாதுகாப்பாக லாரியை சாலை ஓரத்துக்கு கொண்டு வந்து நிறுத்தினார். லாரியை நிறுத்திய சில நிமிடங்களில் ஸ்டியரிங் மீது சாய்ந்து, உயிரை விட்டார். தகவலறிந்து அங்கு வந்த இளகல் போலீசார் ஓட்டுநரின் உடலை மீட்டனர். மாரடைப்பு ஏற்பட்ட நிலையிலும், மற்றவரின் உயிரை காப்பாற்ற நினைத்த ஓட்டுநரை, பொது மக்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !