உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / அரசு மருத்துவமனைகளில் மலிவு விலை மருந்தகத்துக்கு... அனுமதி மறுப்பு! 31 கடைகள் திறக்க கோரிய விண்ணப்பங்கள் நிராகரிப்பு

அரசு மருத்துவமனைகளில் மலிவு விலை மருந்தகத்துக்கு... அனுமதி மறுப்பு! 31 கடைகள் திறக்க கோரிய விண்ணப்பங்கள் நிராகரிப்பு

பெங்களூரு: கர்நாடகாவில் மாவட்டம், தாலுகா அரசு மருத்துவமனைகளில் மலிவு விலை மருந்தகம் அமைக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால், மாநில அரசு, மருத்துவமனை வளாகத்தில் இந்த மருந்தகம் திறக்க அனுமதி மறுத்ததுடன், 31 கடைகள் திறக்க கோரிய விண்ணப்பங்களையும் நிராகரித்துள்ளது.ஏழை, நடுத்தர மக்களுக்காக, மத்திய அரசு மலிவு விலை மருந்தகத்தை அறிமுகப்படுத்தியது. கர்நாடகாவில் 1,225 மலிவு விலை மருந்தகங்கள் உள்ளன. இவற்றில் சில மருந்தகங்கள், மாநில அரசு மருத்துவமனை வளாகத்திற்குள் அமைந்து உள்ளன.

அனுமதி

இந்நிலையில், மாநில சுகாதார துறை செயலர் வெளியிட்டுள்ள அறிக்கை:கர்நாடக சுகாதார துறைக்கு உட்பட்ட சமுதாய சுகாதார மையங்கள், தாலுகா மருத்துவமனைகள், மாவட்ட மருத்துவமனைகளில் 200 மலிவு விலை மருந்தகங்கள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.அரசு மருத்துவமனைகளில் உள்ள டாக்டர்கள், 'பிராண்டடு' மருந்துகளை தனியார் மருந்தகங்களில் வாங்க, நோயாளிகளிடம் பரிந்துரைக்க கூடாது. அதற்கு பதிலாக, மருத்துவமனை வளாகத்தில் உள்ள மலிவு விலை மருந்தகங்களில், அதே செயலாற்றலுடன், குறைந்த விலையில் மருந்துகள் வாங்க நோயாளிகளுக்கு பரிந்துரைக்க வேண்டும்.அதே வேளையில், தனியார் மருந்தகங்களில் விற்கப்படும் பிராண்டடு மருந்துகளில் உள்ள அதே செயலாற்றல், மலிவு விலை மருந்தகத்தில் விற்கப்படும் மருந்துகளிலும் உள்ளது என்று பொது மக்கள், நோயாளிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

நிராகரிப்பு

மாநிலத்தில் ஆரம்ப சுகாதார மையங்களில் மலிவு விலை மருந்தகங்கள் திறக்க வந்த விண்ணப்பங்களில் இதுவரை 207 விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளன. மனுதாரர்களின் விண்ணப்பங்கள் ஏ.ஆர்.எஸ்., எனும் ஆரோக்கிய ரக் ஷா சமிதியின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. அதன் அனுமதி கிடைத்ததும், மாநில அரசின் அனுமதி பெற்ற பின், விண்ணப்பதாரருக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. மலிவு விலை மருந்தகம் அமைக்க, விண்ணப்பிக்கப்பட்ட மனுக்களில், 31 விண்ணப்பங்கள் துறையின் இயக்குனரக அளவில் நிலுவையில் உள்ளன. மருந்தகம் அமைப்பதற்கான கொள்கை காலாவதியாகி விட்டது. இதன் பின்னணியில், மருந்தகங்கள் நிறுவுவது தொடர்பான கொள்கையை விரிவாக மறுபரிசீலனை செய்ய வேண்டிய அவசியம் உள்ளது.தற்போது அரசின் கொள்கையின்படி, அரசு மருத்துவமனை நோயாளிகளுக்கு, மருந்துகளை வெளியில் வாங்கும்படி பரிந்துரை செய்யக்கூடாது. இதன் பின்னணியில், மருத்துவமனை வளாகத்துக்குள், மலிவு விலை மருந்தகம் திறப்பது, அரசின் கொள்கைக்கு எதிரானது.அத்துடன், மலிவு விலை மருந்தகத்துக்கு, பி.பி.பி.ஐ., எனும், 'இந்திய பார்மசி பிரிவியூ ஏஜென்சி' தான், மருந்துகளை குறைந்த விலைக்கு விற்பனை செய்கிறது. இது தொடர்பாக சுகாதார துறை கமிஷனர் தேவையான ஆவணங்களை சமர்ப்பித்துள்ளார்.

அரசு உத்தரவு

கமிஷனர் பரிந்துரைப்படி, அரசு மருத்துமனைக்குள் மலிவு விலை மருந்தகம் திறக்க அனுமதி நிறுத்தப்பட்டு உள்ளது. எனவே, நிலுவையில் உள்ள 31 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுகின்றன.அதேவேளையில், மருத்துவமனை காம்பவுண்ட் வெளியே இம்மருந்தகங்கள் இயங்க எந்த தடையும் இல்லை. தற்போது அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள மலிவு விலை மருந்து கடைகளை மூட தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.கே.எஸ்.எம்.எஸ்.சி.எல்., எனும் கர்நாடகா மாநில மருத்துவ பொருட்கள் கழக நிறுவனம், பி.பி.பி.ஐ.,யுடன் பேசி, குறைந்த விலையில் மருந்துகள் வாங்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. பி.பி.பி.ஐ.,யிடம் குறைந்த விலை மருந்துகளை வாங்கி, நோயாளிகளுக்கு இலவசமாக வழங்க மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.அரசு மருத்துவமனைகளிலேயே நோயாளிகளுக்கு இலவசமாக மருந்துகள் வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதற்கு ஏற்ற வகையில், மருத்துவமனையில் இயங்கி வரும் மருந்தகங்களில் தேவையான மருந்துகள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளன. மாநில அரசின் இந்த கொள்கையால், மலிவு விலை மருந்தகம் திறக்க விண்ணப்பிக்கப்பட்டிருந்த 31 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. அரசு நடத்தும் மருந்தகங்களில் இலவசமாக கிடைக்கும் மருந்துகளை, பொது மக்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.- தினேஷ் குண்டுராவ்அமைச்சர், சுகாதார துறை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை