தாவணகெரே தெற்கு தொகுதியில் களமிறங்க காத்திருக்கும் மஹிமா படேல்
தாவணகெரே: சாமனுார் சிவசங்கரப்பா மறைவால் காலியான, தாவணகெரே தெற்கு தொகுதியில் போட்டியிட, முன்னாள் முதல்வர் ஜே.ஹெச்.படேலின் மகன் மஹிமா படேல் ஆர்வமாக உள்ளார். தாவணகெரே தெற்கு தொகுதியின் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,வாக இருந்த சாமனுார் சிவசங்கரப்பா, சில மாதங்களுக்கு முன் உடல்நல குறைவால் காலமானார். இந்த தொகுதியில் அவரது குடும்பத்தினர் போட்டியிட வாய்ப்பை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். தாவணகெரே தெற்கில் முஸ்லிம் சமுதாய வாக்காளர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். எனவே, இம்முறை தங்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என, சில முஸ்லிம் தலைவர்கள் நெருக்கடி கொடுக்கின்றனர். வீட்டு வசதி துறை அமைச்சர் ஜமீர் அகமதுகான் மூலமாக, சீட் பெறவும் முயற்சிக்கின்றனர். இடைத்தேர்தலில், பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி போட்டியிடுமா என்பது இன்னும் தெரியவில்லை. இதற்கிடையே, ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் கர்நாடக தலைவர் மஹிமா படேல், தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக களமிறங்க ஆர்வம் காட்டுகிறார். இதுதொடர்பாக, பீஹார் முதல்வர் நிதிஷ்குமாரை சந்திக்க, வரும், 7ம் தேதி பாட்னாவுக்கு செல்ல அவர் திட்டமிட்டுள்ளார். இவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டாலும் ஆச்சர்யமில்லை. ஜே.ஹெச்.படேல் கர்நாடக முதல்வராக இருந்த போது, ஷிவமொக்காவின் சென்னகிரி தாலுகாவை சேர்த்து, புதிய தாவணகெரே மாவட்டம் அமைக்கப்பட்டது. இதை நினைவு கூர்ந்து மக்கள் தன்னை ஆதரிக்க வாய்ப்புள்ளது என்கிறார், மஹிமா படேல் கருதுகிறார்.