மெஜஸ்டிக் - கன்னல்லி இன்று முதல் பஸ் இயக்கம்
பெங்களூரு: பயணியரின் வசதிக்காக, மெஜஸ்டிக் பஸ் நிலையத்தில் இருந்து, புறநகரின் கன்னல்லிக்கு பி.எம்.டி.சி., பஸ் போக்குவரத்து இன்று முதல் இயக்கப்படுகிறது. இது குறித்து, பி.எம்.டி.சி., வெளியிட்ட அறிக்கை: பயணியரின் வசதிக்காக, புதிய வழித்தடங்களில் பி.எம்.டி.சி., பஸ் போக்குவரத்தை துவங்குகிறது. பெங்களூரின் இதய பகுதியான மெஜஸ்டிக் பஸ் நிலையத்தில் இருந்து, புறநகருக்கு இணைப்பு ஏற்படுத்தும் வகையில், இந்த பஸ் அமையும். 238 - யுகே வழித்தட எண் கொண்ட பஸ், மெஜஸ்டிக் பஸ் நிலையம் - கன்னல்லி இடையே இயங்கும். இந்த பஸ் சுஜாதா டாக்கீஸ், மாகடி சாலை முதலாவது கிராஸ், விஜயநகர், சந்திரா லே - அவுட், மூடலபாளையா, நாகரபாவி சதுக்கம், முத்தைய்யன பாளையா, சிக்ககோடிஹள்ளியில் நிற்கும். மெஜஸ்டிக் பஸ் நிலையத்தில் இருந்து, காலை 7:55, 9:25, 10:35, 11:50, மதியம் 1:00, 2:35, 3:45 மணிக்கு புறப்படும். கன்னல்லியில் இருந்து காலை 8:40, 10:50, மதியம் 12:10, 1:25 , 3:00, மாலை 5:35 மணிக்கு புறப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.