பெங்களூரு: நீதிமன்ற காவல் முடிந்து, 55 நாட்களாகியும் போலீசார் காவல் நீட்டிப்பு கோராததால், திருமண ஆசை காண்பித்து பெண்ணை ஏமாற்றியவருக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. பல்லாரியின் வால்மீகி சமுதாயத்தை சேர்ந்த இளம்பெண், பெங்களூரு சிக்கலசந்திராவில் உள்ள ஒரு ஹோட்டலில் கேஷியராக பணியாற்றி வருகிறார். அதே ஹோட்டலின் வெளியே, மாண்டியா மாவட்டம், ஹுப்பனஹள்ளி கிராமத்தின் ஒக்கலிகர் சமுதாயத்தை சேர்ந்த சரண், 23, ஜூஸ் கடை நடத்தி வருகிறார். இருவருக்கும், 2024ல் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் காதலாக மாறியது. இருவரும் ஒரே அறையில் வசித்து வந்தனர். திருமணம் செய்து கொள்வதாக கூறி, 2024 நவம்பர் முதல் 2025 ஆகஸ்ட் வரை, பெண்ணுடன் சரண் உல்லாசமாக இருந்துள்ளார். இதில் இளம்பெண் கருவுற்றார். தன்னை திருமணம் செய்யுமாறு அவர் வலியுறுத்தியபோது, மாத்திரை வழங்கி கருவை கலைத்துள்ளார். பின், பல காரணங்களை கூறி திருமணத்தை தள்ளிப்போட்டு வந்துள்ளார். இறுதியில் ஜாதியை காரணம் காண்பித்து திருமணம் செய்ய சரண் மறுத்து விட்டார். கோபமடைந்த இளம்பெண், சுப்ரண்யபுரா போலீசில் புகார் அளித்தார். வழக்குப் பதிவு செய்த போலீசார், சரணை செப்., 15ல் கைது செய்தனர். அன்றைய தினமே, மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, செப்., 30 வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். அதன்பின், சரணின் காவலை நீட்டிக்கக் கோரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த விசாரணை அதிகாரி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. செப்., 30ம் தேதி விசாரணையின்போது, சரணின் நீதிமன்ற காவல், அக்., 10 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதை சுட்டிக்காட்டி, சரண் தரப்பில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஜாமின் கேட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இம்மனு நீதிபதி பசவராஜ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட பின், நீதிபதி கூறியதாவது: உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி கைது செய்யப்பட்ட நபர், நீதிமன்றத்தில் நேரடியாகவோ அல்லது காணொளி காட்சி மூலமாகவோ ஆஜர்படுத்தவில்லை என்றால், அவரின் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்படாது. அவரின் நீதிமன்ற காவலின் காலம் முடிந்து விட்டால், மீண்டும் காவலில் எடுக்க, போலீசார் மனுத் தாக்கல் செய்ய வேண்டும். அதன் மீது புதிதாக உத்தரவிடலாம். ஆனால், அத்தகைய உத்தரவு எதுவும் இல்லாமல், கைது செய்யப்பட்டவரை காவலில் வைத்திருப்பது சட்ட விரோதமானது. எனவே, மனுதாரரின் மனு ஏற்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.