போதையில் கார் கண்ணாடிகளை துப்பாக்கியால் சுட்டவர் கைது
சூர்யாநகர்: குடிபோதையில் கார் கண்ணாடியை துப்பாக்கியால் சுட்ட, ஐ.டி., ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார். உத்தர பிரதேச மாநிலம், லக்னோவை சேர்ந்தவர் அனுராக் திவாரி, 40. பெங்களூரு ரூரல் ஆனேக்கல் தாலுகா சூர்யாநகர் பகுதியில் உள்ள, அடுக்குமாடி குடியிருப்பின், மூன்றாவது மாடியில் உள்ள வீட்டில் வசிக்கிறார். ஒயிட்பீல்டில் உள்ள ஐ.டி., நிறுவனத்தில் வேலை செய்கிறார். நேற்று அதிகாலை 2:30 மணிக்கு மொபைல் போனில் சத்தமாக பேசி கொண்டிருந்த அனுராக், வீட்டில் இருந்த ஏர் கன் ரக துப்பாக்கியை எடுத்து, அடுக்குமாடி குடியிருப்பின் பார்க்கிங் பகுதியில் நின்ற, இரண்டு கார்களின் கண்ணாடியில் சுட்டார். இதில், கார் கண்ணாடி நொறுங்கி விழுந்தது. துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டு வந்த காவலாளியை நோக்கியும், அனுராக் துப்பாக்கியால் சுட்டார். குறி தவறியதால் அந்த காவலாளி உயிர் தப்பினார். தகவல் அறிந்த சூர்யாநகர் போலீசார் அங்கு சென்று, அனுராக்கை கைது செய்தனர். அவர் பயன்படுத்திய துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது. முதற்கட்ட விசாரணையில் குடிபோதையில், கார் கண்ணாடியை துப்பாக்கியால் சுட்டது தெரிய வந்தது. அவர் பயன்படுத்தியது ஏர் கன் ரக துப்பாக்கி.