அரிய வகை குரங்கு கடத்தியவர் கைது
பெங்களூரு: அரிய வகை குரங்குகளை கடத்திய தாய்லாந்து நாட்டை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார். பெங்களூரு கெம்பே கவுடா சர்வதேச விமானை நிலையத்தில் நேற்று வழக்கம் போல சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது, தாய்லாந்து நாட்டின் பாங்காங்கிலிருந்து விமானத்தில் வந்த பயணியரை சோதனையிட்டனர். அச்சமயத்தில், தாய்லாந்து நாட்டை சேர்ந்த 27 வயதான நபர் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் நடந்து கொண்டார். அவரிடம் விசாரித்ததில், அந்நபர் அழிந்து வரக்கூடிய குரங்கு இனங்களான சில்வரி கிப்பன், கருப்பு ஷங்க்டு டக் இனத்தை சேர்த்த மூன்று குரங்குகளை கடத்தி வந்தது தெரிய வந்தது. வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவர் கைது செய்யப்பட்டார். மூன்று குரங்குகளும் மீட்கப்பட்டன. அவரிடம் மேலும் விசாரணை நடந்து வருவதாக சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.