இருவரின் சண்டையை தீர்க்க முயன்றவர் குத்திக்கொலை
டி.தாசரஹள்ளி: சண்டையை தீர்த்து வைக்க முயன்றவர், கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். குடகு மாவட்டம், மடிகேரியை சேர்ந்தவர் ஜீவன், 29. பெங்களூரின் டி.தாசரஹள்ளியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியர். கடந்த 20ம் தேதி டி.தாசரஹள்ளி பைப்லைன் ரோட்டில் உள்ள மதுபான கடைக்கு ஜீவன் மது அருந்த சென்றார். அங்கு இருவர் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். இவர்களின் சண்டையை, ஜீவன் தீர்த்து வைக்க முயன்றார். எனினும், இருவரும் சமாதானம் ஆகாததால், மதுபான கடையின் வெளியே ஜீவன் சென்றார். அவரிடம் சென்ற இருவரும், 'எங்கள் சண்டையை தீர்க்க நீ யார்' என்று கேட்டு தகராறு செய்தனர். அதில் ஒருவர் கத்தியை எடுத்து, ஜீவன் கழுத்தில் குத்தினார். உயிரை காப்பாற்ற அங்கிருந்து ஓடிய ஜீவன், தனியார் மருத்துவமனைக்கு சென்று நடந்தசம்பவத்தை கூறினார். அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். கழுத்தில் பலத்த கத்திக்குத்து காயம் ஏற்பட்டதால், அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் பலன் அளிக்காமல் நேற்று காலை இறந்தார். பீன்யா போலீசார் கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்த போது, ஜீவனை கத்தியால் குத்தியது டி.தாசரஹள்ளியின் கவுஸ், அவரது நண்பர் வாசிம் என்பது தெரிந்தது. அவர்களை போலீசார் தேடுகின்றனர்.