கார்களை வாடகைக்கு எடுத்து மோசடி செய்தவர் தலைமறைவு
பல்லாரி : நுாற்றுக்கணக்கான கார்களை, வாடகைக்கு பெற்று, குறைந்த விலைக்கு விற்று விட்டு தலைமறைவானவரை, போலீசார் தேடுகின்றனர். ராய்ச்சூர் மாவட்டம், சிந்தனுாரை சேர்ந்தவர் முகமது ஜாஹித் பாஷா, 40. இவர் பல்வேறு நகரங்களில் டிராவல்ஸ் நிறுவனங்கள், அறிமுகம் உள்ளவர்களிடம் கார்களை வாடகைக்கு பெறுவார். இந்த கார்களை வேறு இடத்துக்கு கொண்டு சென்று, குறைந்த விலைக்கு விற்பார். சில கார்களை அடமானம் வைத்து, பணம் பெற்று கொண்டு தப்பியோடுவார். பல்லாரி, ராய்ச்சூர், கொப்பால் உட்பட பல நகரங்களில் இவர் மீது வழக்கு பதிவாகியுள்ளது. அதே போன்று, இவர் மீது பல்லாரி நகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. வழக்கு பதிவு செய்த போலீசார், 44 கார்களை மீட்டனர். தலைமறைவாக உள்ள முகமது ஜாஹித் பாஷாவை தேடி வருகின்றனர். இது குறித்து, பல்லாரி எஸ்.பி.ஷோபா ராணி கூறியதாவது: முகமது ஜாஹித் பாஷா, பல்லாரியில் 103 கார்களை வாடகைக்கு பெற்றுள்ளார். மாதந்தோறும் 50,000 ரூபாய் வாடகை கொடுப்பதாக, ஆசை காண்பித்து உள்ளார். சிலருக்கு கார்களை திருப்பி கொடுத்துள்ளார். சிலருக்கு கொடுக்கவில்லை. இது குறித்து, பல்லாரியின் கவுல் பஜார், ப்ரூஸ் பேட், காந்திநகர், ஏ.பி.எம்.சி., உட்பட பல்வேறு இடங்களில் வழக்கு பதிவானது. தற்போது 44 கார்களை மீட்டு, உரிமையாளர்களிடம் ஒப்படைத்தோம். மற்ற கார்களையும் மீட்போம். முகமது ஜாஹித் பாஷாவிடம் யாராவது, குறைந்த விலைக்கு கார் வாங்கியிருந்தால், அதை போலீசாரிடம் ஒப்படைக்க வேண்டும். திருப்பி தராவிட்டால், அவர்களும் குற்றவாளிகளாவர். திருடுவது மட்டுமல்ல; திருட்டு பொருட்களை வாங்கு வதும் குற்றம்தான். இவ்வாறு அவர் கூறினார்.