எத்தினஹொளே திட்டம் மந்தம் தேவகவுடா குற்றச்சாட்டு
- நமது நிருபர் -: ''எத்தினஹொளே திட்டம் மந்த கதியில் நடந்து வருகிறது. இதற்கு கர்நாடக கா ங்கிரஸ் அரசே காரணம்,'' என, ராஜ்யசபாவில் முன்னாள் பிரதமர் தேவகவுடா குற்றம் சாட்டினார். ராஜ்யசபாவில் நேற்று நடந்த, பட்ஜெட் தொடர்பான விவாதத்தில், தேவகவுடா பேசியதாவது: கர்நாடகாவில் காங்கிரஸ் அரசின் அலட்சியத்தால், எத்தினஹொளே திட்டப்பணிகள், மந்த கதியில் நடக்கின்றன. திட்டத்தை விரைந்து முடித்து, வறட்சி மாவட்டங்களுக்கு தண்ணீர் கொண்டு வருவதில் அரசுக்கு அக்கறை இல்லை. ஹாசன், ஷிவமொக்கா, சிக்கமகளூரு உட்பட பல்வேறு மாவட்டங்களில், காட்டு யானைகளின் தாக்குதலுக்கு, தினமும் மக்கள் பலியாகின்றனர். விவசாயிகளின் பயிர்கள் பாழாகின்றன. மாநிலத்தில் மனிதர்கள், விலங்குகள் இடையேயான மோதலை தடுப்பதில், காங்கிரஸ் அரசு தோற்றது வருத்தம் அளிக்கிறது. பெங்களூரின் கழிவு நீரை, மூன்று கட்டங்களில் சுத்திகரிக்காமல் சிக்கபல் லாபூர், கோலார் மாவட்டங்களின் ஏரிகளில் நிரப்புகின்றனர். இதன் விளைவாக இப்பகுதிகளில் பயிரிடப்படும் பழங்கள், காய்கறிகளில் விஷத்தன்மை ஏற்படுகிறது. மக்களின் வாழ்க்கையில், மாநில அரசு விளையாடுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.