மனநலம் பாதித்தவர் கொடூர தாக்குதல் உறக்கத்தில் இருந்த 6 பேர் படுகாயம்
கதக்: கதக் மாவட்டம், முன்டரகி தாலுகாவின் டோனிதான்டா கிராமத்தில் வசிக்கும் சிலர், வெப்பத்தின் தாக்கம் காரணமாக, வீட்டுக்குள் உறங்க முடியாமல், வீட்டுக்கு வெளியே உறங்குகின்றனர். நேற்று முன்தினம் இரவும், அவரவர் வீட்டு வாசலில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர். அப்போது அதே கிராமத்தில் வசிக்கும் ஹர்ஜப்பா லமானி என்பவர், கையில் உருட்டுக்கட்டையுடன் அங்கு வந்தார். உறக்கத்தில் இருந்தவர்களை, உருட்டுக்கட்டையால் கண் மூடித்தனமாக தாக்கினார். இதில் எக்கப்பா பஜனேநாயக், ஷேகப்பா நாயக், தேவக்க நாயக், ஷண்முகப்பா ராத்தோட், ஜெகதீஷ் லமானி, சவளவ்வா லமானி ஆகியோர் பலத்த காயமடைந்தனர். இவர்களின் அலறல் சத்தம் கேட்டு, அப்பகுதியினர் வெளியே வந்து பார்த்தனர். ஆறு பேர் ரத்த காயங்களுடன் இருப்பது தெரிந்தது. அவர்களை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர். அவர்களின் தலை, முகம், கண் பகுதியில் காயங்கள் இருப்பதால், தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. தக வலறிந்து அங்கு வந்த முன்டரகி போலீசார், ஹர்ஜப்பா லமானியை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று, விசாரித்தனர். முதற்கட்ட விசாரணையில் இவர் மனநிலை பாதிக்கப்பட்டவர்; சிகிச்சையில் இருப்பது தெரிந்தது. அவர் என்ன காரணத்தால், கிராமத்தினரை தாக்கினார் என போலீசார் விசாரிக்கின்றனர். இந்த சம்பவத்தால், கிராமத்தில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கையாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.