உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / மெட்ரோ கட்டணம் உயர்வு இன்று முதல் அமல்

மெட்ரோ கட்டணம் உயர்வு இன்று முதல் அமல்

பெங்களூரு: 'நம்ம மெட்ரோ' ரயில் கட்டணத்தை 50 சதவீதம் உயர்த்தியது மட்டுமின்றி, இன்று முதல் அமல்படுத்தி, மெட்ரோ நிர்வாகம், பயணியருக்கு 'ஷாக்' கொடுத்துள்ளது.மத்திய - மாநில அரசின் ஒருங்கிணைப்பில், பெங்களூரு நம்ம மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.பி.எம்.ஆர்.சி.எல்., எனும் பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட்டின் கட்டண நிர்ணய கமிட்டி, 45 சதவீதம் கட்டணத்தை உயர்த்தும்படி கோரிக்கை விடுத்திருந்தது. இதற்கு, மத்திய, மாநில உறுப்பினர்கள் அடங்கிய பி.எம்.ஆர்.சி.எல்., ஒப்புதல் அளித்தது. கட்டண உயர்வை இம்மாதம் 1ம் தேதி முதல் அமல்படுத்த திட்டமிட்டிருந்தது.

எதிர்ப்பு

ஆனால், மெட்ரோ ரயில் பயணியர், அரசியல் கட்சி தலைவர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். சிலர், நேரடியாக பிரதமரின் கவனத்துக்கு கொண்டு சென்றனர். கட்டண உயர்வு தொடர்பாக விரிவான அறிக்கை சமர்ப்பிக்கும்படி, பிரதமர் அலுவலகம் கேட்டுக் கொண்டது. இதனால் பயணியர் நிம்மதி அடைந்தனர்.இந்நிலையில், நேற்று புதுடில்லியில் பா.ஜ., ஆட்சியை பிடித்திருந்த வேளையில், மாலையில் பெங்களூரு மெட்ரோ ரயில் கட்டணத்தை உயர்த்தி, மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.அதில் குறிப்பிட்டுள்ளதாவது:முதல் இரண்டு கிலோ மீட்டருக்கு 10 ரூபாயும்; 30 கி.மீ.,க்கு அதிகமாக பயணிப்போருக்கு, 60 ரூபாயில் இருந்து 90 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.ஸ்மார்ட் கார்டுகளில் குறைந்தபட்சம் 50 ரூபாய் இருக்க வேண்டும் என்பதை 90 ரூபாய் என உயர்த்தப்பட்டுள்ளது. ஸ்மார்ட் கார்டுகள் பயன்படுத்துவோருக்கு உள்ள ஐந்து சதவீதம் தள்ளுபடி தொடரும்.அதே வேளையில், பயணியர் நெரிசல் மிகுந்த பரபரப்பான வேளை மற்றும் நெரிசல் இல்லாத நேரம் என இரண்டாக பிரித்து, கூடுதலாக 5 சதவீதத்துடன் 10 சதவீதம் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட நேரம்

வார நாட்களில் பயணியர் நெரிசல் இல்லாத நேரமான காலை 5:00 மணி முதல் 8:00 மணி வரையிலும்; மதியம் 12:00 மணி முதல் மாலை 4:00 மணியிலும்; இரவு 9:00 மணிக்கு மேல் அதாவது மெட்ரோ ரயில் டிக்கெட் கவுன்டரில் ஸ்மார்ட் கார்டை பதியும்போது, பதிவாகும் நேரத்தை பொறுத்து ஐந்து சதவீதம் தள்ளுபடி கிடைக்கும்.அனைத்து ஞாயிற்றுக்கிழமை, தேசிய விடுமுறை நாட்களான ஜன., 26, ஆக., 15, அக்டோபர் 2ம் தேதிகளில் ஸ்மார்ட் கார்டுகளில் பயணம் செய்தால் 10 சதவீதம் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.ஒரு நாள் 25 முதல் 99 பேர் என குழுவாக செல்வோருக்கு 300 ரூபாயும்; மூன்று நாட்கள் 100 முதல் 1,000 பேர் குழுவாக செல்வோருக்கு 20 சதவீதத்துடன் 600 ரூபாயும்; 5 நாட்கள் 1,000 பேருக்கு அதிகமாக குழுவாக செல்வோருக்கு 25 சதவீதத்துடன் 800 ரூபாயும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.பெங்களூரில் மெட்ரோ ரயில் கட்டணம் கடைசியாக 2017ல் உயர்த்தப்பட்டது. அதன் பின்னர் எட்டு ஆண்டுகளுக்கு பின், தற்போது உயர்த்தப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி