உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / மெட்ரோ ரயிலில் பயணியர் எண்ணிக்கை மீண்டும் உயர்வு!... : கட்டண உயர்வால் குறைந்தது மீண்டும் அதிகரிப்பு

மெட்ரோ ரயிலில் பயணியர் எண்ணிக்கை மீண்டும் உயர்வு!... : கட்டண உயர்வால் குறைந்தது மீண்டும் அதிகரிப்பு

பெங்களூரு: பெங்களூரு மெட்ரோ ரயிலில் கடந்த பிப்ரவரியில் டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட்ட பின், ஒரு நாளைக்கு சராசரியாக பயணம் செய்வோரின் எண்ணிக்கை, 8 லட்சத்தில் இருந்து, 7.49 லட்சமாக குறைந்தது. தற்போது, மீண்டும் மெட்ரோ ரயிலில் பயணிப்போர் எண்ணிக்கை, 8 லட்சத்துக்கும் அதிகமாகி உள்ளதாக பெங்களூரு மெட்ரோ நிறுவன அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். பெங்களூரில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதில், மெட்ரோ ரயில்கள் பங்கு முக்கியமானது. மெட்ரோ ரயிலில் ஒரு நாளைக்கு லட்சக்கணக்கிலானோர் பயணம் செய்கின்றனர். அப்படி இருக்கையில், கடந்த பிப்ரவரி 9ம் தேதி மெட்ரோ ரயில் டிக்கெட் கட்டணம் 45 சதவீதம் உயர்த்தப்பட்டது. அதிருப்தி இது பயணியர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது. கட்டண உயர்வை கண்டித்து, பயணியர் மெட்ரோ நிலையங்கள் முன்பு போராட்டம் நடத்தினர். கட்டண உயர்வுக்கு மாநில அரசு, மத்திய அரசே காரணம் எனவும்; மத்திய அரசு மாநில அரசே காரணம் எனவும் மாறி மாறி குற்றம் சாட்டி வந்தனர். இது, பயணியரை மேலும் சோர்வடைய செய்தது. இருப்பினும், டிக்கெட் கட்டணம் குறைக்கப்படவில்லை. இது, பயணியர் எண்ணிக்கை குறைவதற்கு காரணமாக அமைந்தது. கடந்த ஜனவரியில் சராசரியாக ஒரு நாளைக்கு 8.03 லட்சம் பேர் பயணம் செய்த நிலையில், டிக்கெட் உயர்வால், பிப்ரவரியில் ஒரு நாளைக்கு சராசரியாக 7.49 லட்சம் பேராக பயணியர் எண்ணிக்கை குறைந்தது. இது மெட்ரோ நிர்வாகத்திற்கும், பயணியருக்கும் நெருக்கடியை ஏற்படுத்தியது. இந்த நிலையிலிருந்து மெட்ரோ நிர்வாகம் தற்போது மீண்டு உள்ளது. மீண்டும் ஒரு நாளைக்கு சராசரியாக 8 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணம் செய்கின்றனர். பழைய நிலை இது குறித்து, பெங்களூரு மெட்ரோ நிர்வாக அதிகாரிகள் கூறியதாவது: டிக்கெட் கட்டண உயர்வுக்கு பிறகு, பயணியரின் எண்ணிக்கை மார்ச்சில் பெரும் சரிவை சந்தித்தது. மார்ச்சில் ஒரு நாளைக்கு சராசரியாக பயணம் செய்வோர் எண்ணிக்கை 7.24 லட்சம்; ஏப்ரலில் ஒரு நாளைக்கு 7.62 லட்சம்; மேயில் ஒரு நாளைக்கு 7.56 லட்சமாக இருந்தது. இந்நிலையில், கடந்த ஜூன் மாதத்தில் ஒரு நாளைக்கு சராசரியாக பயணம் செய்வோர் எண்ணிக்கை, 7.89 லட்சமாக உயர்ந்தது. அதுமட்டுமின்றி, ஜூனில் சில நாட்களில், 8 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணித்தனர். இதன் மூலம் மெட்ரோ பயணியர் எண்ணிக்கை, மீண்டும் பழைய நிலைக்கு திரும்பியது. இம்மாதம் பல நாட்களில் பயணியர் எண்ணிக்கை 8 லட்சத்துக்கும் அதிகமாக இருந்து உள்ளது. மெட்ரோ ரயிலில் பயணம் செய்வோர் எண்ணிக்கை பல மாதங்களுக்கு பின், பழைய நிலைக்கு திரும்பி உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர். மாநிலத்தில் பைக் டாக்சிக்கு தடை விதிக்கப்பட்டதும், மெட்ரோ ரயிலில் பயணியர் எண்ணிக்கை அதிகரித்ததற்கு ஒரு காரணமாக அமைந்து உள்ளது. அறிக்கை என்னாச்சு? கட்டண உயர்வு குறித்து மெட்ரோ ரயில் கட்டண நிர்ணய குழு, ஆய்வு செய்து, அறிக்கை சமர்ப்பித்தது. இந்த அறிக்கை இதுவரை பொது வெளியில் வெளியிடவில்லை. இந்த அறிக்கையின் மூலம் மட்டுமே, டிக்கெட் உயர்வுக்கான சரியான காரணத்தை கண்டறிய முடியும். அப்படி இருக்கையில், மெட்ரோ இதுவரை அறிக்கையை வெளியிடவில்லை. அறிக்கையை பொது வெளியில் வெளியிட வேண்டும் என பெங்களூரு தெற்கு தொகுதி பா.ஜ., -- எம்.பி., தேஜஸ்வி சூர்யா தொடர்ச்சியாக கூறி வந்தார். இருப்பினும், மெட்ரோ நிறுவனம் மவுனம் சாதித்தால், கடந்த 6ம் தேதி தேஜஸ்வி சூர்யா கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணையில், 'மெட்ரோ நிறுவனம் கட்டண நிர்ணய குழுவின் அறிக்கையை வெளியிட வேண்டும்' என, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இருப்பினும், இதுவரை மெட்ரோ நிறுவனம் அறிக்கையை வெளியிடவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை