பெங்களூரு: கிராம பகுதிகளில் வசிக்கும், 30 வயதுக்கு மேற்பட்டோருக்கு மருத்துவ பரிசோதனை செய்து, இலவச மருந்து வழங்கும், 'கிரஹ ஆரோக்கியா' திட்டம், வெற்றிகரமாக செயல்படுகிறது. லட்சக்கணக்கான மக்கள் பயன் அடைந்துள்ளனர். கர்நாடகாவின் பெரும்பாலான கிராமங்களில், குறிப்பாக மலைப்பகுதி, வனப்பகுதி கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு, சரியான சிகிச்சை வசதி இல்லை. ரத்த அழுத்தம், நீரிழிவு நோயால் அவதிப்படும் பலரும், நகரப்பகுதிகளுக்கு வந்து மருந்துகள் வாங்க வேண்டியுள்ளது. மருத்துவ பரிசோதனைக்கும் நகரங்களுக்கு வருகின்றனர். நகரங்களுக்கு செல்ல முடியாததால், ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் உள்ளவர்கள் மருந்துகள் இல்லாமல் நாட்களை கடத்துகின்றனர். இது, அவர்களுக்கு அபாயத்தை ஏற்படுத்தும். இதை மனதில் கொண்டு, மாநில அரசு, 'கிரஹ ஆரோக்கியா' திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. இது மக்களுக்கு மிகவும் பயன் அளிக்கிறது. இது குறித்து, சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் கூறியதாவது: கிராமங்களில் வசிக்கும், 30 வயதுக்கு மேற்பட்ட மக்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்து, இலவச மருந்து வழங்கும், 'கிரஹ ஆரோக்கியா' திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இது வெற்றி அடைந்துள்ளது. மாநிலம் முழுதும் ரத்த அழுத்தம், நீரிழிவுக்கு 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இலவச மருந்து பெறுகின்றனர். மாரடைப்பு, சிறுநீரக கோளாறு, பக்கவாதம் போன்ற உயிருக்கு அபாயமான நோய்களுக்கு, ஆரம்பத்திலேயேசிகிச்சை பெறுகின்றனர். இத்திட்டம் ஆறாவது வாக்குறுதி திட்டமாக மாறியுள்ளது. துறையின் தொலை நோக்கு பார்வையால் வகுக்கப்பட்ட திட்டம், கோலாரில் சோதனை முறையில் செயல்படுத்தப்பட்டது. அதன்பின் மாநிலம் முழுதும் விஸ்தரிக்கப்பட்டது. ரத்த அழுத்தம், நீரிழிவு, புற்றுநோய், மன நலன் பாதிப்பு உட்பட, 14 விதமான நோய்களுக்கு இலவச சிகிச்சை கிடைக்கிறது. இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை, ஆயுஷ்மான் ஆரோக்கிய மையங்களில், நோயாளிகள் இலவச மருந்துகள் பெற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. திட்டத்துக்கு 115 கோடி ரூபாய் மதிப்புள்ள மருந்துகள் வாங்க, முடிவு செய்யப்பட்டுள்ளது. சிறுநீரக பிரச்னைக்காக 46,399 பேர் பரிசோதனை செய்து கொண்டனர். இதில் 7,719 பேருக்கு பிரச்னை இருப்பதாக, முதற்கட்ட அறிக்கையில் தெரிய வந்துள்ளது. சுவாசப்பை பிரச்னைக்காக 9,48,671 பேர், கல்லீரல் பிரச்னைக்காக 9,58,671 பேர் பரிசோதனை செய்து கொண்டனர். இவர்களில் 7,535 பேருக்கு பிரச்னை உள்ளது. அதேபோன்று வாய்ப்புற்று, கர்ப்பப்பை புற்று, மார்பக புற்று உட்பட, பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை பெறுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.