வரிகளை மத்திய அரசு கட்டுப்படுத்த அமைச்சர் பரமேஸ்வர் கோரிக்கை
பெங்களூரு: ''மத்திய அரசின் கொள்கைகளால், விலைகள் உயர்ந்து உள்ளன. வரிகளை மத்திய அரசு கட்டுப்படுத்தினால், மாநில அரசு பயனடையும்,'' என உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் தெரிவித்தார்.பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:மாநில அரசு, தங்கள் வருவாயை அதிகரிக்கவே, வரிகளை அதிகரிக்கின்றன. டீசல், பெட்ரோல் விலையில் இரண்டு ரூபாய் என்பது இயற்கையானது. வரிகளை மத்திய அரசு கட்டுப்படுத்தினால், மாநில அரசு பயனடையும்.வக்ப் வாரிய மசோதாவுக்கு எதிர்ப்பு இருந்தபோதும், லோக்சபாவில், 288 பேர் ஆதரவு அளித்துள்ளனர். இதனால் மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா, அரசியல் உள்நோக்கத்துடன் கொண்டு வரப்பட்டதாக, முஸ்லிம் சமுதாயத்தினரும், மற்ற சமுதாயத்தினரும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.மசோதா நிறைவேற்றப்பட்டதால், அடுத்து என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். மற்ற விஷயங்கள் குறித்து பேசவே, லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுலை அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் சந்தித்து உள்ளனர். மாநில அரசியல் நிலவரம் குறித்து பேச செல்லவில்லை.பா.ஜ.,வின் 18 எம்.எல்.ஏ.,க்களை சஸ்பெண்ட் செய்தது சபாநாயகர். இதற்கும், மாநில அரசுக்கும் சம்பந்தமில்லை. சபாநாயகர் தேர்வின் போது, பா.ஜ.,வினரும் அவருக்கு ஆதரவு அளித்தனர். சபாநாயகர் இருக்கை முன் பா.ஜ.,வினர் நடந்து கொண்ட விதம், எவ்வளவு சொல்லியும் கேட்காததால், அவர் இந்நடவடிக்கையை எடுத்துள்ளார்.நான் துணை முதல்வராக இருந்தபோது, புதுடில்லியில் கர்நாடக பவன் கட்ட அடிக்கல் நாட்டினேன். ஆனால், நான் ஏன் அழைக்கப்படவில்லை என்று தெரியவில்லை. முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் அனைவரும் அங்குள்ளனர். எனக்கும் அங்கு செல்ல வேண்டிய தேவை இல்லை என்று தோன்றியது.சித்தகங்கா மடத்தின் சிவகுமார சுவாமிகளுக்கும், எனது தந்தைக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. எனக்கு தோன்றும் போதெல்லாம், மடத்துக்கு செல்வேன்.அமைச்சர் ராஜண்ணா மீதான 'ஹனி டிராப்', அவரது மகனும், எம்.எல்.சி.,யுமான ராஜேந்திரா மீது கூலிப்படை ஏவி தாக்குதல் நடத்த திட்டமிட்ட சம்பவம் விசாரணை நடந்து வருகிறது. இந்நேரத்தில் அது தொடர்பாக தகவல் தெரிவிக்க இயலாது.இவ்வாறு அவர் கூறினார்.