ஹனி டிராப் குறித்த விசாரணை அமைச்சர் ராஜண்ணா மழுப்பல்
பெங்களூரு: 'ஹனி டிராப்' குறித்து சி.ஐ.டி., போலீசார் நடத்திய விசாரணையில், 'ஹனி டிராப் செய்ய வந்த பெண் பற்றி சரியாக ஞாபகம் இல்லை' என்று, அமைச்சர் ராஜண்ணா மழுப்பலாக பதில் அளித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.கர்நாடக கூட்டுறவு அமைச்சர் ராஜண்ணா, 74. இவர், தன்னை ஹனி டிராப் செய்ய முயற்சி நடக்கிறது என்று, சட்டசபையில் வைத்து தெரிவித்தார். மாநில, தேசிய அரசியல்வாதிகள் 48 பேரின் வீடியோக்கள் இருக்கும் பென்டிரைவ் இருப்பதாகவும் கூறினார். இது தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.ஹனி டிராப் குறித்து விசாரிக்க சி.ஐ.டி., அமைத்து அரசு உத்தரவிட்டது. இந்நிலையில் பெங்களூரின் ஜெயமஹால் சாலையில் உள்ள ராஜண்ணாவின் அரசு இல்லத்திற்கு, நேற்று முன்தினம் சென்ற சி.ஐ.டி., போலீசார், ஹனி டிராப் செய்ய முயன்றது பற்றி விசாரித்து உள்ளனர்.'என் வீட்டிற்கு வந்த ஒரு இளம்பெண் ஜீன்ஸ் பேன்ட், நீல நீற டாப் அணிந்து இருந்தார். முக்கியமான விஷயம் பேச வேண்டும் என்று கூறினார். அவரை எனது அறைக்கு அழைத்து சென்றேன். எனது கையை பிடித்து இழுக்க முயன்றார். கோபத்தில் அவரை கன்னத்தில் அறைந்து அங்கிருந்து அனுப்பி வைத்தேன்.'அவரது முகம் இப்போது எனக்கு சரியாக ஞாபகம் இல்லை. அந்த பெண்ணுடன் தாடி வைத்த ஒரு நபரும் வந்தார். நீங்கள் தேடினால் அந்த பெண்ணை கண்டுபிடிக்கலாம்' என்று, போலீசாரிடம், ராஜண்ணா கூறி இருக்கிறார்.போலீசார் கேட்ட சில கேள்விகளுக்கு, ராஜண்ணா மழுப்பலாக பதில் அளித்தததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதனால் விசாரணை நடத்துவதில் போலீசாருக்கு சிரமம் ஏற்பட்டு இருக்கிறது.