உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / சாதனை மாநாட்டை வெற்றிகரமாக நடத்திய அமைச்சர் ஜமீர் கானுக்கு மேலிடம் பாராட்டு

சாதனை மாநாட்டை வெற்றிகரமாக நடத்திய அமைச்சர் ஜமீர் கானுக்கு மேலிடம் பாராட்டு

பெங்களூரு: கர்நாடக காங்கிரஸ் அரசு இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி ஹொஸ்பேட்டில் ஏற்பாடு செய்யப்பட்ட சாதனை மாநாட்டை, வெற்றிகரமாக நடத்திய வீட்டு வசதித்துறை அமைச்சர் ஜமீர் அகமது கானை, கட்சி மேலிடம் பாராட்டியுள்ளது.கர்நாடகாவில் காங்கிரஸ் பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்து, இம்மாதம் 20ம் தேதியுடன், இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்தன. சில அமைச்சர்கள் மீது, ஊழல் குற்றச்சாட்டு, வால்மீகி மேம்பாட்டு ஆணைய ஊழல், 'முடா' முறைகேடு உட்பட பல நெருக்கடிகளை கடந்து, இரண்டு ஆண்டுகள் ஆட்சியை முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு, வெற்றிகரமாக இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்தது.

செல்வாக்கு

இதை சிறப்பிக்கும் நோக்கில், விஜயநகரா மாவட்டம், ஹொஸ்பேட்டில் சாதனை மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டது. மாநாட்டை நல்ல முறையில் நடத்தி, தன் செல்வாக்கை அதிகரிக்க வேண்டும் என்பது, முதல்வர் சித்தராமையாவின் விருப்பமாக இருந்தது.எனவே மாநாட்டை சிறப்பாக செய்வார் என்று நம்பி, பொறுப்பை, தனக்கு நெருக்கமான விஜயநகரா மாவட்ட பொறுப்பு அமைச்சர் ஜமீர் அகமது கானிடம் ஒப்படைத்தார்.அவரது நம்பிக்கை வீண் போகவில்லை. சாதனை மாநாடு வெற்றி அடைந்துள்ளது. விஜயநகரா மாவட்டத்தில் இருந்து, லட்சக்கணக்கான மக்களை திரட்டினார். இவர்களின் போக்குவரத்துக்கு, ஆயிரக்கணக்கான கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ்களை புக்கிங் செய்திருந்தார்.தனிப்பட்ட முறையில் 2,000 பஸ்களை ஏற்பாடு செய்தார். இதனால் தொண்டர்கள், பயனாளிகள் மாநாடு இடத்துக்கு வர முடிந்தது.

வசதிகள்

இவர்களுக்கு தேவையான குடிநீர், மோர், உணவு உட்பட அனைத்து வசதிகளையும் செய்திருந்தார். நிழல், இருக்கைகள் பொருத்தியிருந்தார். இது கட்சி மேலிடத்துக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது.லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல், காங்., தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முதல்வர் சித்தாரமையா உட்பட, முக்கிய தலைவர்கள், அமைச்சர் ஜமீர் அகமது கானை பாராட்டினர்.காங்கிரசின் செல்வாக்குமிக்க சிறுபான்மை தலைவரான அவர், கட்சி தனக்கு அளிக்கும் பொறுப்புகளை திறமையாக நிர்வகிப்பவர். சட்டசபை தேர்தலிலும் கூட, பல பொறுப்புகளை ஏற்றிருந்தார். ஜாபர் ஷெரிப்பை அடுத்து, சிறுபான்மையின தலைவராக உருவெடுத்துள்ளார்.தெலுங்கானா சட்டசபை தேர்தலின்போது, சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் தொகுதிகளில், காங்., மேலிடம் இவரை பிரசாரத்துக்கு பயன்படுத்தியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை