அமைச்சர்களின் துறைகள் கலெக்ஷன் சென்டர்கள்
பெங்களூரு: ''அமைச்சர்களின் துறைகள், 'கலெக்ஷன் சென்டர்'களாக மாறியுள்ளன. அரசின் ஊழலை கண்டித்து, ம.ஜ.த., போராட்டம் நடத்துவதை, வரவேற்கிறோம்,'' என எதிர்க்கட்சி தலைவர் அசோக் தெரிவித்தார்.பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:காங்., தனது அரசியலுக்காக கொண்டு வந்துள்ள, ஜாதி வாரி கணக்கெடுப்பு அறிக்கையை ஒப்புக்கொள்ள முடியாது. இது போன்று மடாதிபதிகள், காங்கிரஸ், ம.ஜ.த., தலைவர்கள் கூறுகின்றனர்.சரியான முறையில் ஆய்வு செய்து, அறிக்கை தாக்கல் செய்தால் ஆட்சேபிக்க மாட்டோம்.எந்த விஷயத்தை கையில் எடுத்தால், பதவியை தக்க வைத்து கொள்ளலாம் என, திட்டமிடுவதில் முதல்வர் சித்தராமையா நிபுணர்.இந்த அறிக்கையை அவரது கட்சியினர் ஒப்புக்கொண்டனரா என்பதை பகிரங்கப்படுத்த வேண்டும். அனைவரின் கருத்துகளை கேட்டறிந்த பின், அறிக்கையை தாக்கல் செய்யலாமே.தங்கள் வீட்டுக்கு யாரும் வந்து தகவல் பெறவில்லை என, பலரும் என்னிடம் கூறினர்.ஆனால் அதிகாரிகளோ, 'நாங்கள் வீடு வீடாக சென்று, தகவல் கேட்டறிந்தோம்' என பொய் சொல்கின்றனர்.அமைச்சர்களின் துறைகள், 'கலெக்ஷன் சென்டர்' களாக மாறியுள்ளன. அரசின் ஊழலை கண்டித்து, ம.ஜ.த., நாளை (இன்று) போராட்டம் நடத்துவதை, வரவேற்கிறோம். குமாரசாமியுடன் எங்களின் உறவு உறுதியாக உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.