ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய அமைச்சர் சிறப்பு அதிகாரி கைது
பெங்களூரு: புதிதாக கட்டப்படும் கட்டடத்திற்கு மின் இணைப்பு வழங்கவும், தடையில்லா சான்றிதழ் கொடுக்கவும் 50,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய, மின் துறை அமைச்சர் ஜார்ஜின் சிறப்பு அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். கர்நாடக மின்சார அமைச்சர் ஜார்ஜ். இவரது சிறப்பு அதிகாரி ஜோதி பிரகாஷ், 50. இவர், கே.பி.டி.சி.எல்., எனும் கர்நாடக மின் பகிர்மான கழகத்தில் நிர்வாக செயற்பொறியாளராக பணியாற்றுகிறார். பெங்களூரு பேடரஹள்ளியில் வசிக்கும் ஒப்பந்ததாரர் அனந்தராஜு என்பவர், புதிதாக அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் பணியை குத்தகைக்கு எடுத்துள்ளார். இந்த கட்டடத்திற்கு மின் இணைப்பு மற்றும் தடையில்லா சான்றிதழ் பெற மின் பகிர்மான கழகத்தில் விண்ணப்பித்திருந்தார். இதை பரிசீலித்த ஜோதி பிரகாஷ், தடையில்லா சான்றிதழ் வழங்க, ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். முதலில் அனந்தராஜு ஒப்புக் கொண்டார். பின், மனம் மாறிய அவர், ஜோதி பிரகாஷ் மீது லோக் ஆயுக்தாவில் புகார் செய்தார். அனந்தராஜுக்கு சில அறிவுரைகள் கூறிய, லோக் ஆயுக்தா போலீசார், ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்து அனுப்பினர். நேற்று மாலை பேடரஹள்ளியில் அனந்தராஜுவிடம் இருந்து, ஜோதி பிரகாஷும், அவரது கார் டிரைவர் நவீன், 34, என்பவரும், 50,000 ரூபாய் பெற்றனர். அப்போது லோக் ஆயுக்தா போலீசார், இருவரையும் கையும் களவுமாக கைது செய்தனர். பணம் பறிமுதல் செய்யப்பட்டது.