காணாமல் போன மூதாட்டி சூட்கேசில் பிணமாக மீட்பு
பெங்களூரு: காணாமால் போன, 61 வயது மூதாட்டியின் உடல், ஏரியில் சூட்கேசில் மிதந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பெங்களூரு கும்பலகோடு போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட ராமோஹள்ளி ஏரியில் நேற்று காலை சிவப்பு நிற சூட்கேசில், உடலின் ஒரு பகுதி மிதந்ததை அப்பகுதியினர் கண்டனர். இது தொடர்பாக, கும்பலகோடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். பெங்களூரு தென்மேற்கு பிரிவு துணை கமிஷனர் அனிதா ஹத்தனவர் கூறியதாவது: ராமோஹள்ளி ஏரியில் சூட்கேசில் சடலம் இருப்பதாக தகவல் கிடைத்தது. சூட்கேசில் இருந்த பெண்ணின் பெரும்பாலான பகுதியை, நீர்வாழ் உயிரினங்கள் தின்றிருந்தன. கொலை செய்யப்பட்டவர் சல்லகட்டாவை சேர்ந்த ஜெயம்மா, 61, என்பது தெரியவந்து உள்ளது. ஒரு வாரத்திற்கு முன் காணாமல் போனதாக, அவரது குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்திருந்தனர். இந்நிலையில், சூட்கேசில் பிணமாக கண்டெடுக்கப்பட்டு உள்ளார். அவரை மூன்று அல்லது நாட்களுக்கு முன் கொலை செய்து, சடலத்தை ஏரியில் வீசியிருக்கலாம் என சந்தேகிக்கிறோம். வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரிக்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.