எம்.எல்.ஏ., ஹரிஷ் பூஞ்சா வழக்கு ஐகோர்ட்டில் இன்று விசாரணை
பெங்களூரு,: தட்சிண கன்னடா மாவட்டம், பத்ரபைலுவில் உள்ள தெக்கரு ஸ்ரீ கோபாலகிருஷ்ணா கோவிலில், 3ம் தேதி பிரம்ம கலா உத்சவம் நடந்தது.அப்போது பெல்தங்கடி பா.ஜ., - எம்.எல்.ஏ., ஹரிஷ் பூஞ்சா பேசுகையில், ''இத்திருவிழாவுக்காக பொருத்தப்பட்ட டியூப் லைட்களை, 'பியரிகள்' (கடலோர மாவட்டம், கேரளா எல்லையில் வசிக்கும் முஸ்லிம்களை அழைக்கும் பெயர்) உடைத்துள்ளனர். அவர்களுக்கு திருவிழாவுக்கான அழைப்பிதழ் கொடுத்திருக்கக் கூடாது. ஹிந்துக்களான நாம், அவர்களை ஊக்கப்படுத்தக்கூடாது. அவர்களை ஹிந்துக்கள் எதிர்த்து நிற்க வேண்டும்,'' என்று பேசியிருந்தார். இதையடுத்து, தெக்கர் பகுதியை சேர்ந்த இப்ராஹிம், உப்பனங்கடி போலீசில் புகார் அளித்தார். அதில், 'வகுப்புவாத வெறுப்பு பேச்சு பேசிய, எம்.எல்.ஏ., ஹரிஷ் பூஞ்சா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று குறிப்பிட்டிருந்தார். இதன்படி, அவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.தன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யும்படி, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஹரிஷ் பூஞ்சா மனுத் தாக்கல் செய்திருந்தார். இம்மனு நேற்று நீதிபதி ஸ்ரீஷனானந்தா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.அப்போது அவர் கூறுகையில், 'இம்மனு மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டிய மனுவாகும். இம்மனு மீது விசாரணை நடத்தலாமா, வேண்டாமா என்பதை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் கேட்கப்படும். அவர் ஒப்புதல் அளித்தால், விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்' என கூறினார்.இந்த மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது. அப்போது நீதிபதி, முடிவை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.