சட்டவிரோத கல்குவாரிகளை தடுக்காவிட்டால் போராட்டம் எம்.எல்.ஏ., சோமசேகர் எச்சரிக்கை
பெங்களூரு: ''என் தொகுதியில் சட்டவிரோதமாக கல்குவாரிகள் நடக்கின்றன. அவற்றை கட்டுப்படுத்தாவிட்டால், போராட்டம் நடத்துவேன்,'' என, யஷ்வந்த்பூர் பா.ஜ., - எம்.எல்.ஏ., சோமசேகர் எச்சரிக்கை விடுத்தார். பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி: என் தொகுதிக்கு உட்பட்ட, கெங்கேரி பேரூராட்சியின் சிக்கனஹள்ளி மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் சட்டவிரோதமாக கல்குவாரிகள் நடக்கின்றன. பாறைகளை உடைக்க வெடி மருந்துகளை பயன்படுத்துகின்றனர். இதனால், கிராமத்தினர் பாதிப்படைந்துள்ளனர். வெடிபொருட்களை பயன்படுத்துவதால், பறவைகள், வன விலங்கு கள் இறக்கின்றன. கர்ப்பிணி சிறுத்தை உட்பட நான்கு சிறுத்தைகள் இறந்துள்ளன. கல்குவாரிகள் பற்றி வனத்துறை, சுரங்க துறையிடம் புகார் அளித்தும் பயன் இல்லை. வனத்துறை அமைச்சர் போனை எடுப்பதே இல்லை. சட்டவிரோத கல்குவாரிகளை கட்டுப்படுத்தாவிட்டால், நான் போராட்டத்தில் ஈடுபடுவேன். இவ்வாறு கூறினார். வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் கூறியதாவது: கல்குவாரி வனப்பகுதி எல்லைக்குள் வரவில்லை. வனத்திற்கு வெளியே உள்ளது. பாறையை வெடி வைத்து தகர்க்கும் போது, ஒரு சிறுத்தை இறந்தது. அதன் உடலை பிரேத பரிசோதனை செய்த போது, வயிற்றில் குட்டி இருந்தது தெரிய வந்தது. தவறு செய்தவர்கள் மீது, ஏற்கனவே கிரிமினல் வழக்கு பதிவாகியுள்ளது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். எம்.எல்.ஏ., சோமசேகருடன் பேசுவேன். கல்குவாரிகள் சட்டவிரோதமாக செயல்பட்டால் நடவடிக்கை எ டுப்போம். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், எவ்வளவு நெருக்கடி வந்தாலும் பணியமாட்டோம். இவ்வாறு கூறினார்.