பிரசாத லட்டில் முள் இல்லை எம்.எம்.கோவில் நிர்வாகம் மறுப்பு
சாம்ராஜ்நகர்: 'மலை மஹாதேஸ்வரா கோவிலுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டில் முள் இருந்ததாக வீடியோ வெளியிடப்பட்டு உள்ளது' என, எம்.எம்.கோவில் நிர்வாகம் புகார் தெரிவித்துள்ளது.சாம்ராஜ்நகர், ஹனூர் தாலுகாவில் உள்ளது, எம்.எம்.கோவில் எனும் மலை மஹாதேஸ்வரா கோவில். இக்கோவில் மாநிலத்தில் புகழ்பெற்ற புனித தலங்களில் ஒன்றாக விளங்குகிறது. இங்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு வழங்கப்படுகிறது.இந்த லட்டில் முள் இருந்ததாக கூறி, வீடியோ ஒன்று சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலானது. கோவில் நிர்வாகம் அதிர்ச்சி அடைந்து, விசாரணையில் இறங்கியது.இதுகுறித்து கோவில் மேம்பாட்டு ஆணைய செயலர் ரகு கூறியதவாது:லட்டில் முள் இருப்பது குறித்து உண்மையை கண்டறிய, கோவில் நிர்வாகம் சார்பில் குழு அமைக்கப்பட்டது. இக்குழுவினர் நடத்திய விசாரணையில், லட்டு உற்பத்தி செய்யப்படும் இடம், அதை சுற்றியுள்ள பகுதிகளில் வீடியோவில் காட்சிப்படுத்தப்பட்டது போன்ற முள் செடிகள் எதுவும் இல்லை என கண்டுபிடிக்கப்பட்டது.எனவே, மலை மஹாதேஸ்வரா கோவிலின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில், முள் இருப்பதாக வேண்டுமென்றே யாரோ ஒருவர் வீடியோ வெளியிட்டுள்ளார்.நந்தினி நெய், தரமான திராட்சை, முந்திரி, கடலை மாவு, சர்க்கரை உள்ளிட்டவற்றால் சுத்தமாக லட்டு தயாரிக்கப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.