உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / மருத்துவமனையில் பச்சிளம் குழந்தையை கொன்ற தாய் கைது

மருத்துவமனையில் பச்சிளம் குழந்தையை கொன்ற தாய் கைது

ஷிவமொக்கா: மருத்துவமனையில் கண்டுபிடிக்கப்பட்ட பச்சிளம் குழந்தை வழக்கில் திருப்பம் ஏற்பட்டது. குழந்தையை கொலை செய்த தாயை, போலீசார் கண்டுபிடித்தனர். ஷிவமொக்கா மாவட்ட மருத்துவமனையின் பிரசவ வார்டு கழிப்பறையில் ஆகஸ்ட் 16ம் தேதி பிறந்து ஒரு நாளேயான பச்சிளம் ஆண் குழந்தை இறந்து கிடந்தது. இதை பார்த்த மருத்துவமனை ஊழியர்கள், தொட்டபேட் போலீஸ் நிலையத்தில், புகார் செய்தனர். அங்கு வந்த போலீசார், குழந்தை யாருடையது என, விசாரணை நடத்தினர். ஆரம்பத்தில் பிரசவ வார்டில் இருந்த ஷைலா, 30, என்பவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. ஆனால் குழந்தை தன்னுடையது அல்ல, என அவர் கூறினார். கண்காணிப்பு சம்பவ நாளன்று பிரசவித்த பெண்கள் குறித்து, தகவல் சேகரித்தனர். அப்போது அங்கிருந்த ஷைலாவிடம் மட்டும், குழந்தை இல்லாதது தெரிய வந்தது. நான்கைந்து நாட்களாக போலீசார் பல கோணங்களில் விசாரித்தனர். பிரசவ வார்டில் ஷைலாவை கண்காணிக்க, இரண்டு மகளிர் போலீசார் நியமிக்கப்பட்டிருந்தனர். அவர் மீதான சந்தேகம் உறுதியானது. அவர் மருத்துவமனையில் இருந்து, நேற்று முன் தினம் டிஸ்சார்ஜ் ஆனார். அவரை போலீசார் அழைத்து சென்று விசாரித்த போது, கொலை ரகசியம் வெளியானது. குழந்தையை கொன்றதை ஒப்புக்கொண்டார். ஷைலாவுக்கு திருமணமாகி, இரண்டு குழந்தைகள் உள்ளன. நான்கு ஆண்டுக்கு முன், கருத்தடை அறுவை சிகிச்சை செய்து கொண்டார். ஆனால் சரியான அறுவை சிகிச்சை செய்யாததால், மீண்டும் கர்ப்பம் அடைந்தார். இதை குடும்பத்தினரிடம் கூறாமல் மறைத்தார். இவர் பருமனாக இருந்ததால், கர்ப்பமாக இருப்பதை குடும்பத்தினர் கவனிக்கவில்லை. பிரசவ வலி ஆகஸ்ட் 16ம் தேதி, ஷைலாவின் நாத்தனாருக்கு இதே மருத்துவமனையில் குழந்தை பிறந்தது. அதை பார்க்க மருத்துவமனைக்கு வந்த ஷைலாவுக்கும், பிரசவ வலி ஏற்பட்டது. எனவே வயிற்று வலி என, பொய் சொல்லி அதே வார்டில் சேர்ந்து கொண்டார். அதன்பின் வார்டு கழிப்பறைக்கு சென்று, தனக்கு தானே பிரசவம் பார்த்து கொண்டார். ஆண் குழந்தை பிறந்தது. அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தும் பிளேடால், கழுத்தை அறுத்து கொலை செய்து, உடலை அங்கேயே போட்டதை ஒப்புக்கொண்டார். அவரை போலீசார் கைது செய்தனர். மருத்துவமனை டாக்டர் சித்தனகவுடா பாட்டீல் கூறியதாவது: குழந்தையை கொல்லும் அதிகாரம் யாருக்கும் இல்லை. இது மிகப்பெரிய குற்றமாகும். குழந்தை பிறக்கவி ல்லை என, தினமும் பல பெண்கள் எங்களிடம் சிகிச்சைக்கு வருகின்றனர். குழந்தையில்லை என, மனம் வெதும்பி, கோவில், கோவிலாக செல்்கின்றனர். இத்தகைய சூழ்நி லையில், குழந்தையை கொன்றது வெறித்தனமான செயலாகும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை