இரும்பு கம்பியை காய்ச்சி மகனுக்கு சூடு வைத்த தாய்
ஹூப்பள்ளி: குறும்பு செய்த 3 வயது ஆண் குழந்தைக்கு, மனிதாபிமானமின்றி சூடுவைத்து, அட்டகாசம் செய்த தாயை போலீசார் கைது செய்தனர்.ஹூப்பள்ளி ஓல்டு டவுன், திப்பு நகர் 4வது கிராசில் வசித்து வருபவர் அனுஷா ஹுலிமாரா, 27. இவருக்கு திருமணமாகி 3 வயதில் ஆண் குழந்தை உள்ளது.திருமண வாழ்வில் ஏற்பட்ட பிரச்னையால், தன் குழந்தையுடன், தனியாக வாழ்ந்து வருகிறார். அப்பகுதியில் உள்ள துணிக்கடையில் வேலை செய்கிறார். இதன் மூலம் கிடைக்கும் பணத்தை வைத்து குடும்பத்தை நடத்தி வருகிறார்.இவரது 3 வயது குழந்தை, சிறுபிள்ளைக்கே உரிய குறும்புத்தனத்தை கொண்டதாக இருந்து வருகிறது. ஆத்திரமடைந்த அனுஷா, 'குறும்பு செய்யக்கூடாது' என கூறி, நேற்று முன்தினம் குழந்தையின் கை, கால், பாதம் ஆகியவற்றில் இரும்புக் கம்பியை பழுக்க காய்ச்சி சூடுவைத்துள்ளார்.வலி தாங்க முடியாமல் குழந்தை கதறி உள்ளது. குழந்தையின் உடம்பில் உள்ள காயங்களை பார்த்து அக்கம் பக்கத்தினர் கேட்டபோது, நடந்த சம்பவங்களை விவரித்தது. அதிர்ச்சி அடைந்த அவர்கள், குழந்தையை மருத்துவமனையில் அனுமதித்தனர்.மேலும், ஹூப்பள்ளி ஓல்டு டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், குழந்தையின் தாய் அனுஷாவிடம் விசாரித்தனர். அவரை கைது செய்தனர். பாதிக்கப்பட்ட குழந்தைக்கு தேவையான ஏற்பாடுகளை குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் வழங்க ஏற்பாடு செய்தனர்.