மைசூரு மின் விளக்கு அலங்காரம் நிறைவு 21 நாட்களில் 2.57 லட்சம் யூனிட் மின்சாரம்
மைசூரு, : தசராவுக்காக அரண்மனை நகரில் போடப்பட்டிருந்த மின் விளக்கு அலங்காரம் நேற்றுடன் நிறைவு பெற்றது. 21 நாட்களில் மொத்தம் 2.57 லட்சம் யூனிட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டு உள்ளது. மைசூரு தசராவை ஒட்டி, சாமுண்டீஸ்வரி மின் வினியோக நிறுவனம் சார்பில் செப்., 22ம் தேதி மின் விளக்கு அலங்காரம் துவங்கியது. தேவராஜ் அர்ஸ் சாலை, அக்ரஹாரா சாலை, சாயாஜிராவ் சாலை, இர்வின் சாலை, ஜே.எல்.பி., சாலை, சாமராஜா ஜோடி சாலை, ஆல்பர்ட் விக்டர் சாலை, பண்டிபாளையா வட்ட சாலை, ஆலனஹள்ளி வட்டசாலை மற்றும் முக்கிய நெடுஞ்சாலைகள் என 136 கி.மீ., நீளத்துக்கு சாலைகள்; சாம்ராஜ உடையார் சதுக்கம், ஜெயசாமராஜா உடையார் சதுக்கம், ராமசாமி சதுக்கம், ரயில் நிலையம் அருகில், தொட்டகெரே மைதானம், கே.ஆர்., சதுக்கம், எல்.ஐ.சி., சதுக்கம் உட்பட 118 சதுக்கங்கள், மன்னர்கள் சாமராஜ உடையார், ஜெயசாமராஜ உடையார், ஏ.பி.ஜே., அப்துல் கலாம், விதான் சவுதா, மயில் உருவங்கள் உட்பட பல வடிவங்கள் என பல இடங்களில் எல்.இ.டி., பல்ப்கள் வடிவமைக்கப்பட்டிருந்தன. தசராவின் போது லேசான மழை பெய்த போதும், மின் நிறுவனம் விடுத்திருந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் எந்தவித அசம்பாவிதமும் நடக்கவில்லை. மின் விளக்கு அலங்காரங்கள் யு டியூப், இன்ஸ்டாகிராம், முகநுால் பயன்பாட்டாளர்கள் தங்கள் கணக்குகளில் பதிவேற்றம் செய்து, உலகளவில் பிரபலப்படுத்தினர். சாமுண்டீஸ்வரி மின் வினியோக நிறுவன நிர்வாக இயக்குனர் முனிகோபால் ராஜு கூறுகையில், ''செப்., 22 முதல் அக்., 12 வரை 21 நாட்கள் மின் விளக்கு அலங்காரங்களை, உள்ளூர் மக்களும், சுற்றுலா பயணியரும் ரசித்து உள்ளனர். எங்களின் வழிகாட்டுதலை அனைவரும் பின்பற்றி உள்ளனர். 21 நாட்களுக்கு 2,57,520 யூனிட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டு உள்ளது,'' என்றார்.