உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  ஓட்டப்பந்தயத் தில் சாதிக்கும் நயனா

 ஓட்டப்பந்தயத் தில் சாதிக்கும் நயனா

- நமது நிருபர் - உத்தர கன்னடாவின் முண்டுகோடு தாலுகா, சலகெரே கிராமத்தை சேர்ந்த மஞ்சுநாத் - மங்களா தம்பதியின் மகள் நயனா கோகரே, 22. கர்நாடகாவில் இருந்து ஓட்டப்பந்தயத்தில், புதிய நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார். கடந்த, 2023ம் ஆண்டு நடந்த, ஓட்டப்பந்தய போட்டியில், 100 மீட்டர் துாரத்தை வெறும், 11.9 வினாடிகளில் கடந்ததன் மூலம், இந்தியாவின் மிக வேக 'அன்டர் - 20' வீராங்கனை என்ற பெருமையை பெற்றார். தமிழகத்தின் திருவண்ணாமலை யில் நடந்த தேசிய ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டியில், 200 மீட்டர் பிரிவில் தங்கம் வென்றுள்ளார். இதுபோல, தென்கொரியாவில் நடந்த ஆசிய அன்டர் - 20 சாம்பியன்ஷிப் போட்டியில், இந்தியாவின் சார்பில் பங்கேற்று வெண்கல பதக்கம் வென்றார். தனது விளையாட்டு பயணம் குறித்து நயனா கூறியதாவது: எனது பெற்றோருக்கு என்னுடன் சேர்த்து, 5 பிள்ளைகள். நாங்கள் சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர்கள். விவசாயம் தான் எங்கள் உயிர்நாடி. எங்கள் கிராமத்தில் பள்ளி இல்லாததால் தினமும், 12 கி.மீ., துாரம் நடந்து சென்று, கல்வி பயின்றேன். சிறுவயதில் இருந்தே ஓட்டப்பந்தயம் மீது ஆர்வம் இருந்தது. கிராமத்தில் உள்ள மைதானத்தில் வெறும் காலுடன் ஓடி பழகினேன். ஓட்டப்பந்தயத்தின் போது வீரர், வீராங்கனையர் அணிவது போன்று, டி - ஷர்ட், ஷார்ட்ஸ் அணிந்து நான் ஓடிய போது, எங்கள் கிராமத்தினர் என்னை கேலி, கிண்டல் செய்தனர். ஒரு முறை, பள்ளியில் நடந்த ஓட்டப்பந்தயத்தில் நான் ஓடியதை, 'பிரிட்ஷஸ் ஆப் ஸ்போர்ட்ஸ் பவுண்டேஷன்' அமைப்பினர் கவனித்தனர். அவர்கள் என்னை அடையாளம் கண்டு, முண்டுகோடு நகரில் உள்ள, பயிற்சி முகாமுக்கு அழைத்து சென்று பயிற்சி கொடுத்தனர். பயிற்சியாளர் சந்தோஷ் வழிகாட்டுதல்படி பயிற்சி எடுத்தேன். உடற்தகுதிக்கு தேவையான சத்தான உணவே, அப்போது தான் முதல் முறை சாப்பிட்டேன். முதல்முறையாக 'ஷூ' அணிந்து ஓடிய போது, வித்தியாசமான அனுபவமாகவும், தயக்கமாகவும் இருந்தது. எனது சகோதரர் தான் ஊக்குவித்தார். ஒலிம்பிக்கில் இந்தியாவுக்காக பங்கேற்க வேண்டும் என்பது எனது இலக்கு. இதை நிறைவேற்றும் வகையில் கத்தார், இங்கிலாந்து நாடுகளுக்கு சிறப்பு பயிற்சிக்காக அனுப்பி வைக்கப்பட்டேன். உலகத்தரம் வாய்ந்த டிராக்குகளில் எப்படி ஓட வேண்டும் என்று கற்றுள்ளேன். ஓட்டப்பந்தயத்தில் நிறைய சாதிக்கும் ஆசை உள்ளது. இன்னும் நீண்ட துாரம் பயணிக்க வேண்டி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !