பிசியோதெரபி படிக்க நீட் தேர்வு கட்டாயம்
பெங்களூரு : ''பிசியோதெரபி படிப்புகளில் மாணவர்கள் சேருவதற்கு நீட் தேர்வு கட்டாயம் எழுத வேண்டும்,'' என, மருத்துவ கல்வி அமைச்சர் சரண பிரகாஷ் பாட்டீல் அறிவித்துள்ளார்.'கர்நாடகா பிசியோகான் - 25' என்ற சர்வதேச பிசியோதெரபி மாநாட்டின் துவக்க விழா நேற்று பெங்களூரில் நடந்தது.அமைச்சர் சரண பிரகாஷ் பாட்டீல் பேசியதாவது:மாநிலத்தில் பிசியோதெரபி படிப்புகளில், மாணவர்கள் சேருவதற்கு, நீட் தேர்வு எழுதுவது கட்டாயமாக்கப்படுகிறது. மருத்துவ கல்வியை தேசிய தரம் வாய்ந்த அளவில் மாற்றுவதற்காகவே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.கல்வி தரம், தொழில்முறை தரத்தை மேம்படுத்த நீட் தேர்வின் கீழ் பிசியோதெரபி படிப்புகளை ஒருங்கிணைப்பது வரவேற்கத்தக்கது.திறன் அடிப்படையிலான கற்றலை மேம்படுத்துவதற்காக பிசியோதெரபி படிப்புகள் நான்கு ஆண்டுகளில் இருந்து, ஐந்து ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.நரம்பியல், இதயம், நுரையீரல் பராமரிப்பு, விளையாட்டு மருத்துவம் போன்றவற்றில் பிசியோதெரபிஸ்ட்டின் பங்கு இன்றியமையாதது. இதன் காரணமாக, பல அரசு கல்லுாரிகளில், இப்படிப்பு அதிகளவு அறிமுகப்படுத்தப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.சபாநாயகர் யு.டி.காதர், இஸ்ரேல், ஆஸ்திரேலியா, நேபாளம் உள்ளிட்ட வெளிநாடுகளை சேர்ந்த பிசியோதெரபி நிபுணர்கள், மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர். 800க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி கட்டுரைகளை மாணவர்கள் சமர்ப்பித்தனர்.