உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  வெறுப்பு பேச்சை கட்டுப்படுத்த வருகிறது புதிய சட்டம்

 வெறுப்பு பேச்சை கட்டுப்படுத்த வருகிறது புதிய சட்டம்

பெங்களூரு: வெறுப்பு பேச்சை கட்டுப்படுத்தும் வகையில், புதிய சட்டத்தை அமல்படுத்த காங்கிரஸ் அரசு தயாராகி வருகிறது. பெங்களூரு விதான் சவுதாவில், முதல்வர் சித்தராமையா தலைமையில் நேற்று அமைச்சரவை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்து சட்ட அமைச்சர் ஹெச்.கே.பாட்டீல் அளித்த பேட்டி: நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் அதிகார வரம்புக்கு உட்பட்ட நிலங்களை, பிளாக் காங்கிரஸ் அலுவலக கட்டுமானத்திற்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பெங்களூரு ரூரல் தேவனஹள்ளி தாலுகா சென்னராயப்பட்டணா மற்றும் அதனை சுற்றியுள்ள 13 கிராமங்களில் 1,777 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த, தொழில் துறை வெளியிட்ட அறிவிப்பை தள்ளுபடி செய்ய உள்ளோம். ஹெப்பால் சந்திப்பில் இருந்து மேக்ரி சதுக்கம் வரை வாகன போக்குவரத்தை நிர்வகிக்கும் வகையில், இரட்டை சுரங்கப்பாதை, மேல் மற்றும் கீழ் சாய்வு பாதையுடன் கூடிய உயர்த்தப்பட்ட பாதை அமைக்க 2,215 கோடி ரூபாய் ஒதுக்க ஒப்புதல் கிடைத்து உள்ளது. விவசாயிகளிடம் இருந்து மக்கா சோளம் கொள்முதல் செய்ய அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கான பதிவு செயல்முறை துவங்கப்பட்டு உள்ளது. கர்நாடக வெறுப்பு பேச்சு தடுப்பு மசோதா - 2025; பயலுசீமே பகுதி மேம்பாட்டு வாரிய திருத்த மசோதா - 2025; மலைநாடு பகுதி மேம்பாட்டு வாரிய திருத்த மசோதா - 2025; ஹிந்து மத நிறுவனங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் திருத்த மசோதா - 2025; சாமுண்டீஸ்வரி பகுதி மேம்பாட்டு ஆணையம் திருத்த மசோதா - 2025 ஆகியவை, பெலகாவி கூட்டத்தொடரில் சமர்ப்பிக்க முடிவு செய்து உள்ளோம். ராஜிவ் காந்தி சுகாதார அறிவியல் பல்லைக்கழகம் மூலம் பெங்களூரு கெங்கேரி அருகே பீமனகுப்பேயில் அதிநவீன திறன் ஆய்வகம் அமைக்கப்படும். பெங்களூரு சஜ்ஜேபாளையாவில் 3 ஏக்கர் அரசு நிலத்தில், சிறுநீரகவியல் மருத்துவமனை கட்டப்படும். மத்திய அரசின் ஆயுஷ்மான் திட்டத்தின் கீழ் மாநிலம் முழுதும் 334 சுகாதார மையங்கள் கட்டப்படும். கர்நாடக பொது பள்ளி விதிமுறைகள்படி 800 அரசு பள்ளிகளை கர்நாடக பொது பள்ளிகளாக மேம்படுத்த விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க, பள்ளி கல்வி துறை கமிஷனருக்கு அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி