நைஸ ் சாலையில் கட்டணம் கூடாது: குமாரசாமி சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்: முதல்வர்
பெங்களூரு: ' நைஸ்' சாலையில் வசூலிக்கப்படும் சுங்கக்கட்டணத்தை உடனடியாக நிறுத்துமாறு, மாநில அரசை மத்திய அமைச்சர் குமாரசாமி வலியுறுத்தி உள்ளார். எனினும், இதை உடனடியாக ஏற்றுக் கொள்ளாமல், 'இந்த விஷயத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்' என முதல்வர் சிவகுமார் பதிலளித்து உள்ளார். பெங்களூரில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதில் 'நைஸ் சாலை' எனும் நந்தி உள்கட்டமைப்பு காரிடார் எண்டர்பிரைசஸ் சாலையின் பங்கு முக்கியமானது. பெங்களூரு நகருக்குள் நுழையாமல் ஓசூர் சாலையிலிருந்து துமகூரு அல்லது மைசூரு சாலைக்கு செல்ல, நைஸ் சாலை சிறந்த தேர்வாக உள்ளது. இந்த சாலை தனியாரின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த சாலையில் செல்லும் பைக் உட்பட அனைத்து வாகனங்களுக்கும் சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கடந்த ஜூலை 1ம் தேதி முதல், சுங்கக்கட்டணம் 10 சதவீதம் வரை உயர்த்தப்பட்டது. இதற்கு வாகன ஓட்டிகள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இது குறித்து, மத்திய அமைச்சர் குமாரசாமி, முதல்வர் சிவகுமாருக்கு கடிதம் எழுதினார். நைஸ் ரோட்டில் சுங்கக்கட்டணம் வசூலிப்பதை, உடனடியாக நிறுத்த வேண்டும் என வலியுறுத்தினார். இது குறித்து, குமாரசாமி நேற்று கூறியதாவது: நைஸ் சாலை அமைக்க கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கான இழப்பீட்டு தொகை விவசாயிகளுக்கு வந்து சேரவில்லை. நைஸ் சாலையில் சட்டவிரோதமாக சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது. நைஸ் சாலையை, அரசு தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து, சுங்கக்கட்டணம் வசூலிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும். இது பற்றி காங்கிரஸ் அரசுக்கு கவலையில்லை. அரசு பள்ளி மாணவர்களுக்கு ஏ.ஐ., பாடம் கற்றுக்கொடுப்பதற்கு முன்னதாக, அமைச்சர் பிரியங்க் கார்கேவின் சொந்த மாவட்டமான கலபுரகியில் உள்ள அரசு பள்ளிகளின் நிலைமையை சிவகுமார் அறிய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இதற்கு பதிலளித்து முதல்வர் சிவகுமார் கூறியதாவது: குமாரசாமி அனுப்பிய கடிதம் எனது கவனத்திற்கு வரவில்லை. அந்த கடிதத்தை படித்த பின், பதிலளிப்பேன். நைஸ் சாலை விவகாரத்தில் சட்ட வல்லுநர்கள் ஆலோசனையை பெற்று, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். நீதிமன்ற உத்தரவுகளை பின்பற்றுவேன். இவ்வாறு அவர் கூறினார்.