வயிற்றுக்கு சோறில்லை; தலைக்கு மல்லிகைப்பூ வாக்குறுதி பிரசாரத்துக்கு ரூ.1,076 கோடி செலவு
பெங்களூரு: வாக்குறுதி திட்டங்கள் குறித்து, பிரசாரம் செய்ய காங்கிரஸ் அரசு 1,076 கோடி ரூபாய் செலவிட்டதாக, தகவல் வெளியாகியுள்ளது. கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு அமைய வாக்குறுதி திட்டங்களே முக்கிய காரணமாக இருந்தன. இத்திட்டங்களை எதிர்த்தாலும், தன் ஆட்சியில் உள்ள மாநிலங்களில் இலவச திட்டங்களை செயல்படுத்த, பா.ஜ., ஆர்வம் காட்டுகிறது. பகிரங்கம் வாக்குறுதி திட்டங்கள் முதல்வர் சித்தராமையாவின் செல்வாக்கை அதிகரிக்கின்றன. இதை மனதில் கொண்டே, எந்த காரணத்தை கொண்டும் நிறுத்தக்கூடாது என்பதில் முதல்வர் உறுதியாக உள்ளார். ஆண்டுதோறும் வாக்குறுதி திட்டங்களுக்காக 60,000 கோடி ரூபாய் வரை செலவிடப்படுகிறது. இதன் விளைவாக அரசு, பொருளாதார நெருக்கடியை சந்திக்கிறது. வளர்ச்சி திட்டங்களுக்கு நிதியில்லை என, காங்கிரஸ் எம்.எல்.ஏ.,,க்களே, பலமுறை பகிரங்கமாக குற்றம் சாட்டினர். திட்டங்களை மறு பரிசீலனை செய்யும்படி வலியுறுத்துகின்றனர். வாக்குறுதி திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கவும், இவைகள் சிறப்பாக செயல்படுகின்றனவா என்பதை கண்காணிக்க, பல்வேறு கமிட்டிகளை அரசு அமைத்துள்ளது. கமிட்டியினருக்கு ஊதியம், மற்ற வசதிகள் செய்வதற்காக, லட்சக்கணக்கான ரூபாய் செலவாகிறது. இதை மூத்த தலைவர் தேஷ்பாண்டே சுட்டிக்காட்டினார். இதற்கிடையே அரசின் திட்டங்கள் குறித்து, பிரசாரம் செய்ய அரசு 1,076 கோடி ரூபாய் செலவிட்டதாக, தகவல் வெளியாகியுள்ளது. இதை எதிர்க்கட்சிகள் கண்டித்துள்ளனர். கை விரிப்பு இது குறித்து, 'எக்ஸ்' வலைதளத்தில் ம.ஜ.த., கூறியுள்ளதாவது: வயிற்றுக்கு உணவில்லாத நிலையிலும் கூந்தலில் மல்லிகைப்பூ வைத்து உள்ளது போன்று, அரசு நடந்து கொள்கிறது. காங்கிரஸ் அரசு வெட்கம் கெட்ட அரசாகும். வாட்டர் மேன்கள், அங்கன்வாடி, ஆஷா ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கவும், பின் தங்கிய மாவட்டங்களின் பள்ளிகளில், கம்ப்யூட்டர் லேப் அமைக்க, கழிப்பறை பழுது பார்க்க, கூடுதல் மாணவர் விடுதிகள் கட்ட பணம் இல்லை என, அரசு கை விரிக்கிறது. திட்டங்கள் குறித்து பிரசாரம் செய்ய, 1,076 கோடி ரூபாய் செலவிட்டுள்ளனர். மக்களின் வரிப்பணத்தில் காங்கிரசார், திருவிழா கொண்டாடுகின்றனர். அரசு ஊழியர்கள், ஒப்பந்த ஊழியர்கள் பல மாதங்களாக ஊதியம் கிடைக்காமல் பரிதவிக்கின்றனர். குடும்பத்தை நடத்த, பிள்ளைகளின் கல்விக்கு பணமில்லாமல், ஊழியர்கள் தற்கொலையை நாடுகின்றனர். காங்கிரஸ் நல்லாட்சி நடத்தவில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.