ஒரு தொழிற்சாலை கூட வெளியேறவில்லை தொழில் துறை அமைச்சர் திட்டவட்டம்
மைசூரு: ''கர்நாடகாவில் இருந்து ஒரு தொழிற்சாலை கூட வெளியேறவில்லை. தவறான கருத்துகளை யாரும் பரப்ப வேண்டாம்,'' என, மாநில கனரக தொழில் துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் தெரிவித்தார். மைசூரில் நேற்று அவர் அளித்த பேட்டி: கர்நாடகாவில் இருந்து ஒரு தொழிற்சாலை கூட வெளியேறவில்லை. இது தொடர்பாக, பரப்பப்படும் தவறான கருத்துகளை யாரும் நம்ப வேண்டாம். மாநிலத்தில் தொழில்களின் வளர்ச்சிக்கு தேவையான சூழல் உள்ளது. சிறந்த வளம் உள்ளது. அரசின் தொழில்துறை கொள்கைகள் சிறப்பாக உள்ளன. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பின், கடந்த பிப்.,யில் உலகளாவிய முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தியது. இதன் மூலம், 10.27 லட்சம் கோடி ரூபாய் முதலீடு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், 60 சதவீதத்துக்கும் அதிகமான முதலீடு செய்யப்பட்டுள்ளது. நாங்கள் பேசுவதுடன் நிறுத்த மாட்டோம், செயலில் காண்பிப்போம். இந்த முதலீடுகளால் ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும். நான் தொழில் துறை அமைச்சரான பின், பல நாடுகளுக்கு சென்று முதலீட்டாளர்களை, மாநிலத்தில் முதலீடு செய்ய அழைத்து வருகிறேன். பாக்ஸ்கான் நிறுவனம், தைவானுக்கு பின், நம் நாட்டில், அதன் பிரிவை துவக்கி உள்ளது. விலை உயர்ந்த மொபைல் போன்கள், இங்கிருந்து ஏற்றுமதி செய்யப்படுகின்றன. கடந்த இரண்டு ஆண்டுகளில் ஜப்பான் உள்ளிட்ட பழமையான நாட்டில் இருந்து மாநிலம் 10,500 கோடி ரூபாய் முதலீட்டு உத்தரவாதங்களை பெற்றுள்ளது. ஒசாகா நிறுவனம் முதலீடு செய்ய முன்வந்துள்ளது. 'செமி கண்டக்டர்' உட்பட பல துறைகளுக்கு சலுகைகள் உள்ளன. எங்கள் தொழில் துறை கொள்கை, வணிகத்துக்கு ஏற்றது. ஆனால், மத்திய அரசு, 'செமி கண்டக்டர்' திட்டத்தின் கீழ் சிறப்பு சலுகைகளை வழங்குகிறது. இதனால் இத்தகைய நிறுவனங்கள், பா.ஜ., ஆளும் குஜராத், மஹாராஷ்டரா ஆகிய மாநிலங்களுக்கு செல்வதால், எங்களின் தவறு எதுவும் இல்லை. முதலில் நம் மாநிலத்தில் செமி கண்டக்டர் முதலீடு செய்ய ஒரு நிறுவனம் வந்தது. அவர்கள் டில்லி சென்ற பின், தங்கள் எண்ணத்தை மாற்றிக் கொண்டனர். இவ்வாறு அவர் கூறினார்.