அரசு வக்கீல் கேட்கும் தகவலை வழங்காவிட்டால் அதிகாரிகள் பணிநீக்கம்: ஐகோர்ட் எச்சரிக்கை
பெங்களூரு: 'எந்தவொரு வழக்கிலும் அரசு வக்கீல்கள் கோரிய தகவல்களை வழங்க தவறும் அல்லது தகவல்களை வழங்குவதில் தாமதம் செய்யும் அரசு அதிகாரிகள் மீது விசாரணை நடத்தப்பட்டு, பணியில் இருந்து நீக்க உத்தரவிடப்படும்' என கர்நாடக உயர் நீதிமன்றம் எச்சரித்து உள்ளது. சித்ரதுர்காவை சேர்ந்தவர் விஸ்வநாதன். ஓய்வு பெற்ற அரசு அதிகாரி. சித்ரதுர்கா துணை பிரிவு அதிகாரியிடம் சமர்ப்பித்த விண்ணப்பத்தில், 'என் பணி காலத்தில் சம்பாதித்த பணத்தில் கட்டிய வீடு, என் மகன், மகளின் வசம் உள்ளது. ஓய்வுக்கு பின் என்னை கவனிக்கவில்லை. எனவே, என் வீட்டை ஒப்படைக்க உத்தரவிட வேண்டும்' என்று குறிப்பிட்டிருந்தார். மனுவை விசாரித்த அதிகாரி, 2023 பிப்., 22ல், விஸ்வநாதனிடம், அவரின் வீட்டை ஒப்படைக்க உத்தரவிட்டார். ஆனால் அவரின் மகளும், மகனும் அதிகாரியின் உத்தரவை மதிக்கவில்லை. எனவே, 2023 ஏப்., 5ம் தேதி மாவட்ட கலெக்டர், தாசில்தாரிடம் மனு அளித்திருந்தார். ஆனால் எந்த பலனும் கிடைக்கவில்லை. இதையடுத்து, கர்நாடக உயர்நீதிமன்றத்தில் விஸ்வநாதன் மனு தாக்கல் செய்து, 'மாவட்ட கலெக்டர், தாசில்தாருக்கு உத்தரவிட வேண்டும்' என்று குறிப்பிட்டிருந்தார். இம்மனு நீதிபதி சூரஜ் கோவிந்தராஜ் முன் விசாரணைக்கு வந்தது. 'வழக்கு குறித்து தகவல்களை பெற்று, அதை தெரிவிக்கும்படி அரசு வக்கீலுக்கு நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இம்மனு கடந்த 8ம் தேதி விசாரணைக்கு வந்த போது அரசு தரப்பு வக்கீல், 'சித்ரதுர்கா தாசில்தாரிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் தகவல் வழங்கவில்லை' என்றார். இதை தீவிரமாக எடுத்து கொண்ட நீதிபதி, தாசில்தாருக்கு 50,000 ரூபாய் அபராதத்துடன், வாரண்ட் பிறப்பித்து, டிச., 16ல் (நேற்று) நேரில் ஆஜராக உத்தரவிட்டிருந்தார். நேற்றைய விசாரணையில் தாசில்தார் பங்கேற்றார். அப்போது நீதிபதி சூரஜ் கோவிந்தராஜ், 'அரசு வக்கீல் கேட்ட தகவலை ஏன் வழங்கவில்லை? அதற்கு தாசில்தார், 'தகவல் வழங்கிவிட்டேன்' என்றார். நீதிபதி: ஏன் பொய் சொல்கிறீர்கள்? அரசு வக்கீல் பலமுறை உங்களுக்கு தெரிவித்தபோதும், நீங்கள் தகவல் தரவில்லை. அவர் எப்போது தகவல் கேட்டார், நீங்கள் எப்போது வழங்கினீர்கள், தேதி, நேரம் உள்ளதா. அது குறித்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமா. விசாரணையின் போது, நீங்கள் தாமதமாக தகவல் அளித்தது உறுதி செய்யப்பட்டால், உங்களை பணியில் இருந்து நீக்க உத்தரவிடப்படும். விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமா? குறுக்கிட்ட அரசு வக்கீல்: தற்போதைய துணை பிரிவு அதிகாரியின் உத்தரவின்படி, கடந்த 14ம் தேதி விண்ணப்பதாரரிடம் வீடு ஒப்படைக்கப்பட்டதாக குறிப்பானை வழங்கி உள்ளார். அதை சமர்ப்பித்தார். நீதிபதி: எந்தவொரு வழக்கிலும் அரசு வக்கீல் தகவல் கேட்டால், அதிகாரிகள் தாமதமின்றி தகவல் அளிக்க வேண்டும். தாமதம் அல்லது தகவல் வழங்க தவறினால், இந்த செயலை நீதிமன்றம் பொறுத்து கொள்ளாது. அதிகாரிகளின் அலட்சியம் தீவிரமாக எடுத்து கொண்டு, அத்தகையோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அரசு வக்கீல்: துணை பிரிவு அதிகாரியின் உத்தரவு பின்பற்றப்பட்டு உள்ளது. எனவே, விசாரணை தேவையில்லை. வழக்கை முடித்துவைக்க வேண்டும். இதையடுத்து வழக்கு முடித்து வைக்கப்பட்டது.